Published : 27 Dec 2017 11:10 AM
Last Updated : 27 Dec 2017 11:10 AM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 93-வது பிறந்தநாள் ஸ்டாலின், வாசன், தினகரன் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 93-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 93-வது ஆண்டு தொடக்க தினம், ஆர்.நல்லகண்ணுவின் 93-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மூத்த தலைவர் தா.பாண்டியன், கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு வந்து நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறும்போது, “நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டவும், மதச்சார்பற்ற ஆட்சி அமையவும் நல்லகண்ணு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவர் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும். அவருடைய லட்சியம் நிறைவேற நாம் அனைவரும் பாடுபட வேண்டும்” என்றார். தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் நல்லகண்ணுவுக்கு நேரில் வந்து வாழ்த்து கூறினார்.

டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசியல் வாழ்வில் தூய்மையும் எளிமையும் நேர்மையும் கொண்டு, பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழும் ஆர்.நல்லகண்ணுவின் பிறந்த நாளான இன்று, அவரை வணங்கி என் உளம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கட்சியின் முன்னாள் தலைவர் கே.டி.கே.தங்கமணியின் 16-வது நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு நல்லகண்ணு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x