Last Updated : 01 Dec, 2017 09:58 AM

 

Published : 01 Dec 2017 09:58 AM
Last Updated : 01 Dec 2017 09:58 AM

தமிழ்நாட்டில் 10 நிறுவனங்கள் தினசரி 2,000 லாரி லோடு தரமான எம்-சாண்ட் தயாரிப்பு: மலேசியா மணல் தரமற்றவை என்பது ஆய்வில் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டில் உள்ள 10 நிறுவனங்கள் தினமும் 2 ஆயிரம் லாரி லோடு தரமான எம்-சாண்ட் தயாரிக்கின்றன. ஒரு லோடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ஆற்று மணல் தேவையுடன் ஒப்பிடுகையில் 33 ஆயிரம் லோடு எம்-சாண்ட் பற்றாக்குறையாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இதற்குத் தேவையான அளவு ஆற்று மணல் கிடைப்பதில்லை. அரசு மற்றும் தனியார் துறை கட்டுமானப் பணிகளுக்கு தினசரி 35 ஆயிரம் லாரி லோடு ஆற்று மணல் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது நாள்தோறும் 2 ஆயிரம் லாரி லோடு மணல்தான் கிடைக்கிறது.

ரூ.55 ஆயிரம் வரை..

ஒரு லாரி (200 கனஅடி) ஆற்று மணல் ரூ.30 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. கூடுதல் தேவை காரணமாக ரூ.55 ஆயிரம் வரையிலும் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதால், கட்டுமானப் பணிகள் முழுவதுக்கும் எம்-சாண்ட்டை (நொறுக்கப்பட்ட கல்மணல்) சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 300 எம்-சாண்ட் தொழிற்சாலைகள் உள்ளன. தரமற்ற எம்-சாண்ட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள தமிழக அரசு, எம்-சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பொதுப்பணித் துறை மூலம் பரிசோதனை செய்து தரத்தை உறுதி செய்து கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 20 நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பித்தன. அதில், 10 நிறுவனங்களின் எம்-சாண்ட் மட்டுமே தரமானதாக இருக்கிறது என்று சான்று அளிக்கப்பட்டிருப்பதாக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

எம்-சாண்ட் பற்றாக்குறை

அவர் மேலும் கூறியதாவது: ஆற்று மணலுக்கு மாற்று மணலான எம்-சாண்ட், தமிழ்நாட்டில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலைகள் அனைத்தும் தரமான எம்-சாண்ட் உற்பத்தி செய்வதை உறுதி செய்தாலே, தமிழ்நாட்டின் தேவைக்கு மேல் எம்-சாண்ட் கிடைக்கும். தற்போது தமிழ்நாட்டில் 10 நிறுவனங்கள் மட்டுமே தரமான எம்-சாண்ட் (தினசரி 2 ஆயிரம் லோடு) தயாரிக்கின்றன. தற்போதைய மதிப்பீட்டின்படி, ஆற்று மணல் தேவையுடன் ஒப்பிடுகையில் தினமும் 33 ஆயிரம் லாரி லோடு எம்-சாண்ட் பற்றாக்குறையாக உள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து விரைவில் மேல்முறை யீடு செய்வோம். அப்போது, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் ஆற்றுமணல் தரம் குறைந்தவை என்பதற்கான சென்னை ஐஐடி ஆய்வகத்தின் 5 பக்க அறிக்கையை தாக்கல் செய்வோம். மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள மணல் பருமணலாக இருக்கிறது. அதில் கரிம அசுத்தம் (organic impurities) மிக அதிகமாக இருப்பதால் அதனைப் பயன்படுத்துவது நல்லதல்ல.

மூன்று வகை மணல்

அதுபோல துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் அவல் போல தட்டையாக இருக்கிறது. அதனையும் பயன்படுத்த இயலாது. மணலில் மூன்று வகை உள்ளது. கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்படும் பருமணல் (Coarse Sand), செங்கல் சுவர் கலவைக்கான மிதமான மணல் (Medium Sand), ரவை போல இருக்கும் பூச்சு மணல் (Fine Sand). கம்போடியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மணல் ஐஎஸ்ஐ (இந்திய தர நிறுவனம்) தரத்தில் இல்லை என்பதும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x