வேளாண் விளை பொருள் கொள்முதல் விலை சலுகையில் மாற்றம் கூடாது: மார்க்சிஸ்ட்

வேளாண் விளை பொருள் கொள்முதல் விலை சலுகையில் மாற்றம் கூடாது: மார்க்சிஸ்ட்
Updated on
1 min read

வேளாண் விளை பொருட்களுக்கு மாநில அரசு கூடுதல் விலை கொடுக்கக் கூடாது என்ற மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "விவசாய விளை பொருட்களுக்கு நியாய விலை வேண்டுமென்று, விவசாயிகள் போராடி வரும் வேளையில், நெல், கோதுமை ஆகிய உணவுப் பொருட்களை மாநில அரசு கொள்முதல் செய்யும் போது, மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் கூடுதல் விலை கொடுக்கக் கூடாது என, மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது விவசாயிகளையும், விவசாயத்தையும் கடுமையாகப் பாதிக்கும். மத்திய அரசின் இந்த முடிவை, மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தியா போன்ற நாடுகள் விவசாய விளை பொருட்களுக்கும், விவசாயத்துக்கும் ஆதார விலையோ, மானியமோ அரசு வழங்கக் கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்வதையே கைவிட வேண்டுமென்று, மேலை நாடுகள் இந்தியாவை வற்புறுத்துகின்றன.

தற்போது உலக வர்த்தக நிறுவனத்தில் நிர்ப்பந்தத்தை மத்திய அரசு ஏற்றால், தமிழகம் உள்ளிட்ட இந்திய விவசாயிகள் பாதிப்பதுடன், இந்தியாவின் உணவுச் சந்தையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்குள் செல்லும் நிலை உருவாகும்.

விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் அளித்த பரிந்துரையை மத்திய அரசு அமலாக்க வேண்டும். மேலும் நெல்லுக்கு கூடுதல் விலை கொடுக்கக் கூடாது என்ற முடிவை கைவிட வேண்டும்" என்று ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in