

மதுரை: மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்து குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் விபத்து குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ப.அனந்த் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “சட்டவிரோதமாக சிலிண்டர்களை எடுத்து வந்த காரணத்தால் இந்த தீ விபத்து நேரிட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காயமின்றி தப்பியவர்களை மதுரையிலுள்ள ஓட்டல் ஒன்றில் தங்க வைத்துள்ளோம். அவர்களை விமான மூலம் நாளை (ஆக., 27) அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இறந்தவர்களின் உடல்களும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
ரயில்வே பிரிவு கூடுதல் டிஜிபி வனிதா, இன்று மாலை மதுரை வந்தார். அவர் சம்பவ இடத்தை பார்த்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, இந்த தீ விபத்துக்கு காரணமாக டிராவல்ஸ் உரிமையாளர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. சிலிண்டரை பயன்படுத்தி டீ போட்டதால் அதிலிருந்து வெளியேறிய தீ பொறியால் விபத்து நடந்திருப்பது தெரிகிறது. மேலும், அடுப்பு எரிக்க, மரக்கட்டைகளும், சிலிண்டர்களும் வைத்துள்ளனர். முதல்கட்டமாக இறந்தவர்களின் உடல்களை அனுப்பிவிட்டு, பிறகு விபத்துக்கான காரணம் குறித்து முறையாக விசாரிக்கப்படும் என்றார்.
ரயில்வே எஸ்பி செந்தில்குமார் கூறும்போது, “உரிய விசாரணை நடத்தப்படும். சிலிண்டரால் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விதிமுறையை மீறி சிலிண்டர்கள், விறகு உள்ளிட்டவை எவ்வாறு ரயில் பெட்டிக்குள் அனுமதிக்கப்பட்டன. இவ்விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என்றார்.