

மதுரை ரயில் தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு: மதுரையில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் தண்டவாளத்தில் நின்றிருந்த சுற்றுலா ரயில் தீ விபத்தில் சிக்கியது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் அனைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர்.
ஆகஸ்ட் 17-ஆம் தேதி லக்னோவில் இருந்து IRCTC ஆன்மிகச் சுற்றுலா ரயிலில் புறப்பட்ட பயணிகள் பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு சென்று விட்டு, கடைசியாக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரை வந்தடைந்திருந்தனர்.
பயணி ஒருவர் ஸ்டவ்வைப் பற்ற வைத்து டீ தயாரிக்க, தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. தீயைக் கண்ட வெளியில் இருந்த பயணிகள் சத்தமிட, உள்ளே இருந்த பயணிகள் அவசர கதியில் தீயை அணைக்காமலேயே கீழே இறங்கியுள்ளனர். இதனால், அந்தப் பெட்டி முழுவதும் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதில் ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டு இருந்த வயதானவர்கள் கீழே இறங்க இயலாமல் பலியாகினர்.
மதுரையில் சனிக்கிழமைஅதிகாலை நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீப்பற்றிய விபத்துக்கு ரயிலில் பயணிகள் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்றதே காரணம் என்றும் ரயிவே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘லக்னோவில் புறப்பட்டபோது ரயிலில் சிலிண்டர் இல்லை’: மதுரையில் நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீப்பற்றி விபத்துக்குள்ளான நிலையில், லக்னோ பிரிவு ரயில்வே பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், "லக்னோ சந்திப்பில் இருந்து ஆகஸ்ட் 17 அன்று சம்பந்தப்பட்ட பெட்டி புறப்பட்டபோது அதில் சிலிண்டர் போன்ற தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருக்கவில்லை. 63 பயணிகள் அந்தப் பெட்டியில் இருந்தனர். எங்களது குழுவினர் எப்போதுமே ரயிலில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாகக் கண்காணிப்பார்கள். அப்படி ஏதும் இருந்திருந்தால் நிச்சயம் கைப்பற்றப்பட்டிருக்கும். அப்படியிருக்க, அந்த சிலிண்டர் எப்படி ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.
தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின்:மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்குக் கொண்டுசெல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
‘மதுரை ரயில் விபத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும்’: மதுரை சுற்றுலா ரயில் தீ விபத்துக்கு சமூக விரோதிகளின் சதி வேலைகள் காரணமா என்பதை மிகுந்த கவனத்துடன் முழுமையாக விசாரிக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அதன் மாநிலத் தலைவர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
ரயில்களில் பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை ரயில்வே துறை உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
குறுவை சாகுபடி பாதிப்பு: இபிஎஸ் எச்சரிக்கை: குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், திமுக அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் ஆபத்தானது’: மிகவும் ஆபத்தான தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி ஏற்படுத்திய உ.பி ஆசிரியையின் செயல்: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையின் செயல் ஒன்று வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், த்ரபதி தியாகி என்ற ஆசிரியர் 2 ஆம் வகுப்பு சிறுவனிடம் வாய்ப்பாடு சொல்லும்படி சொல்கிறார். அந்தச் சிறுவனால் அதனை சரியாகச் சொல்ல முடியவில்லை. உடனே சக மாணவனை எழுப்பி அந்தச் சிறுவனை கன்னத்தில் அறையச் சொல்கிறார்.
அந்தச் சிறுவன் அழும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தினை சுட்டிக்காட்டி அந்த மதத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்ததாலே தான் இதுபோன்ற அந்தச் சமூக சிறார்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதாகக் கூறி அந்தச் சிறுவனை இன்னும் பலமாகத் தாக்கும்படி கூறுகிறார்.
இந்தச் செயலைக் கண்டித்துள்ள ராகுல் காந்தி, "அப்பாவிக் குழந்தைகளின் மனதில் பிரிவினைவாதம் என்ற விஷத்தை விதைப்பது, அதுவும் பள்ளி எனும் புனிதமான இடத்தை வெறுப்பை வர்த்தகம் செய்யும் சந்தையாக மாற்றுவது என்பது ஒரு ஆசிரியர் செய்யக்கூடாத உச்சபட்ச இழி செயலாகும்.
இது பாஜக ஊற்றிய அதே மண்ணெண்ணெய் தான். இதைக் கொண்டுதான் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பாஜக வெறுப்பைப் பரப்பியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ஆசிரியை செயல் - பாஜக கருத்து: பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா, "ஒரு மாணவரை சக மாணவர்களை வைத்து அடிக்கச் செய்வது என்பது மோசமான சிந்தனைதான் என்றாலும்,எல்லாவற்றையும் சந்தேகத்தோடு பார்ப்பவர்கள் கூறுவது போல் இதில் வகுப்புவாத சிந்தனை எதுவும் இல்லை.
அவர்களின் அக்கறை மாணவரின் நலனை விட அவரது மத அடையாளத்தின் மீத இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. மாணவனைக் காப்பாற்ற முயலாமல், அவர்களின் வெறுப்பு கொள்கையை பரப்ப பயன்படுத்துவதற்காக வெட்கப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே பள்ளி மாணவரை மத ரீதியாக விமர்சித்ததோடு, சக மாணவர்ளை ஏவி கன்னத்தில் அறையச் செய்த பள்ளி ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு பெயர் சூட்டிய பிரதமர்: நிலவில் லேண்டர் விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி பாயின்ட்' எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில் இருந்து நேரடியாக சனிக்கிழமை காலை பெங்களூரு சென்றார். அங்குள்ள இஸ்ரோ மையத்துக்குச் சென்று விஞ்ஞானிகள் அனைவரையும் பிரதமர் வெகுவாகப் பாராட்டினார். அப்போது பிரதமர் மோடிக்கு லேண்டர் எடுத்தப் புகைப்படங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இதனிடையே நிலவில் சந்திரயான்-2, சந்திரயான்-3 தரையிறங்கிய இடங்களுக்கு திரயங்கா, சிவ சக்தி என பெயரிட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.