Published : 26 Aug 2023 05:51 AM
Last Updated : 26 Aug 2023 05:51 AM

மலிவான அரசியலுக்காக தேசிய விருதின் மாண்பை சீர்குலைக்க கூடாது - முதல்வர் ஸ்டாலின் கருத்து

சென்னை: மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பை சீர்குலைக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் 69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தேசிய திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த படமாக தேர்வாகியுள்ள ‘கடைசி விவசாயி’ படக் குழுவினருக்கு என் பாராட்டுகள்.

மேலும், ‘இரவின் நிழல்’ படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், ‘கருவறை’ ஆவணப் படத்துக்காக சிறப்பு சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வி திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்கு தேர்வாகியுள்ள ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ படக் குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரை விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்கு (‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’) தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான், அந்த விருதுகளை காலம்கடந்தும் பெருமைக்கு உரியவையாக உயர்த்தி பிடிக்கும். மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பை சீர் குலைக்க கூடாது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x