Published : 26 Aug 2023 05:25 AM
Last Updated : 26 Aug 2023 05:25 AM

71-வது பிறந்த நாள் கொண்டாட்டம்; உற்சாகத்துடன் தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்: முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சித் தலைவர்கள் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தனது 71-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர், அங்கு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார்.

சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், தனது 71-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தொண்டர்களை சந்தித்தார். முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, திரை பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ஏராளமான கட்சி தொண்டர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று குவிந்தனர்.

காலை 11 மணியளவில் தேமுதிக அலுவலகம் வந்த விஜயகாந்த், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி, தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை நேரில் சந்தித்த தொண்டர்கள், மிகுந்த உற்சாகத்துடன் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக, விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘படை தலைவன்’ திரைப்படத்தின் டீசரை, விஜயகாந்த் வெளியிட்டார். அப்போது, படக் குழுவினர் உடனிருந் தனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, “விஜயகாந்த் உடல் நிலை குறித்து தவறானசெய்தி வெளியானது கண்டிக்கத்தக்கது. விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். தயவுசெய்து அவரது உடல் நிலை குறித்து யாரும் தவறான தகவலை வெளியிட வேண்டாம். மேலும், தொண்டர்களும் இதுகுறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். உண்மைத் தொண்டர்களின் வாழ்த்து, அவரை 100 வயது வாழவைக்கும்” என்றார்.

இதற்கிடையே, தமிழக முதல்வர் மற்றும் கட்சித் தலைவர்கள், விஜயகாந்துக்கு வாழ்த்து தெரி வித்துள்ளனர். இதுகுறித்து அவர் கள் வெளியிட்ட அறிக்கை:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தேமுதிக நிறுவனத் தலைவரும், எனது தோழருமான விஜயகாந்துக்கு உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் முழு உடல் நலத்துடனும், புத்துணர்ச்சியுடனும் பல்லாண்டு மகிழ்வோடும், நிறைவோடும் வாழ விழைகிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, தொடர்ந்து நாட்டுக்கு நற்பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி: தேமுதிக நிறுவனர் மற்றும் தலைவர் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன், தொடர்ந்து மக்கள் பணி யாற்ற வாழ்த்துகிறேன்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: தேமுதிக தலைவர் நீண்ட ஆயுளுடன், நிறைந்த நலன்களுடன் மக்கள் பணி தொடர வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: விஜயகாந்த் அவருடைய மக்கள் பணியையும், இயக்கப் பணியையும், சிறப்போடு மேற்கொள்ளவும், நல்ல உடல் நலத்தோடு மனிதநேயப் பணிகளை மேற்கொள்ள வும் வாழ்த்துகள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: என் மனதிற்கினிய நண்பர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறேன்.

இதேபோல, சமக தலைவர் சரத்குமார், அமமுக பொதுச் செயலாளர்தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருநாவுக்கரசர் எம்.பி. மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரி வித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x