Published : 26 Aug 2023 05:12 AM
Last Updated : 26 Aug 2023 05:12 AM

அதிமுக பெயர், சின்னம், கொடியை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த கூடாது: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் அதன் தீர்மானங்கள் தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உண்மை, நீதி, நியாயத்தின் பக்கம் நின்று, நீதிமன்றம் இன்று நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் இருப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, இந்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இனியாவது அதிமுக கரைவேட்டி, கட்சி பெயர், சின்னம், கொடிபோன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது.

அதிமுகவை ஒற்றைத் தலைமைசிறப்பாக வழி நடத்துவதற்கான வாய்ப்பை இந்த தீர்ப்பு உருவாக்கிக் கொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்குச் சென்றாலும், இந்த தீர்ப்பு போலவே,உச்சநீதிமன்றமும் தீர்ப்புவழங்கும்.

நீட் விவகாரத்தில் திமுகவை நம்பி, அதிமுக எப்படிப் போராடும். எங்களுக்கு ரகசியம் தெரியும் என்று சொல்லிவிட்டு, தற்போது எங்களுடன் வந்து போராடுங்கள் என்று கேட்பது நியாயமா?

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கும் நாங்கள், எதற்கு பயப்படப் போகிறோம். கனகராஜன் சகோதரர் யாருடைய தூண்டுதலின் பேரிலோ இப்படிப் பேசி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை, சிபிஐ விசாரணை தேவை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x