

சென்னை: நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை செயல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர்கள் பி.எஸ்.மாசிலாமணி, சாமி.நடராஜன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் வலியுறுத்தியுள் ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் மூலம் அரசு அறிவிக்கும் சிறப்புத் திட்டங்களுக்கு 100 ஹெக்டேர் வரையுள்ள நிலங்களில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள் உள்ளிட்டவற்றை தனியாரிடம் கொடுப்பதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.
நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்கெனவே பல சட்டங்கள் உள்ளநிலையில், அந்த சட்டங்களில் குறிப்பிட்டுள்ளபடி, விவசாயிகளிடம் நிலத்தை கையகப்படுத்தும்போது நியாயமான இழப்பீட்டை பெறவேவிவசாயிகள் போராடி வருகின்ற னர். இந்நிலையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய நில ஒருங்கிணைப்புச் சட்டம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நீர்நிலைகளை தாரைவார்க்க மட்டுமே பயன்படும்.
எனவே தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு: தமிழகம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகள், சூழல் அமைப்புகள் நில ஒருங்கிணைப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இத்திட்டம் யாருக்குப் பலனளிக்கும் என்பதை அரசு உணரவேண்டும். நிலம், நீர், நிலைகள் மீது கிராம, உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருக்கும் உரிமைகளையும், அவற்றைப் பாதுகாக்க ஏற்கெனவே உருவாக்கப்பட்ட சட்டங்களையும் நீர்த்துப்போகச் செய்யும் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ தமிழக அரசு செயல்படுத்தக் கூடாது.
இவ்வாறு அவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.