அதிமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை - பொதுச் செயலாளர் பழனிசாமி திட்டவட்டம்

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று, எடப்பாடி அருகேயுள்ள  சிலுவம்பாளையத்தில் நேற்று தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி.
அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று, எடப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையத்தில் நேற்று தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி.
Updated on
1 min read

மேட்டூர்: உயர் நீதிமன்றத் தீர்ப்பு நீதி, தர்மம்,உண்மைக்குக் கிடைத்த வெற்றி.அதிமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற அமர்வு நேற்றுஉத்தரவிட்டது. இதையடுத்து,அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர்அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு, நீதி, தர்மம், உண்மைக்குக் கிடைத்தவெற்றி. அதிமுக பலமாக உள்ளது.மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக அங்கம்வகிக்கிறது. தமிழகத்தில் அதிமுகதலைமையில் கூட்டணி செயல்படுகிறது. இந்தக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.

கோடநாடு வழக்கில் என்னைசம்பந்தப்படுத்திப் பேசுவது தவறானது. ஓர் ஆட்சி இருக்கும்போது, பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். அந்த சம்பவத்தை சட்டரீதியாக அரசு அணுகி, தக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள், அவர்களுக்குச் சாதகமாக சூழ்ச்சி செய்கின்றனர்; அது ஒருபோதும் பலிக்காது.

கனகராஜின் சகோதரர் தனபால், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இன்றைய ஆட்சியாளர்களே அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று, 3 மாதங்கள் சிறையில் அடைத்தனர். நில அபகரிப்பில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வந்தவர்.

கனகராஜை ஜெயலலிதாவின் ஓட்டுநர் என்று இனி யாரும் கூறக்கூடாது. அவர் சசிகலாவின் ஓட்டுநராக இருந்தவர். ஜெயலலிதாவின் ஓட்டுநர் என்று கூறினால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம். ஜெயலலிதாவுக்கு கனகராஜ் ஒருநாள் கூட ஓட்டுநராக இல்லை. ஒரு குற்றவாளியை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநராக இருந்தவர் என்று கூறுவது தவறு. மேலும், கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதைப்பற்றி பேசுவதே தவறு.

தென் மாவட்டங்களில் மாநாடு நடத்த முடியாது என்று சிலர் கூறினர். ஆனால், மதுரை மாநாட்டில் 15 லட்சம் பேர் கலந்துகொண்டனர். அதிமுக ஒன்றாக இருக்கிறது என்பதை மாநாட்டின் மூலம் நிரூபித்துள்ளோம். சந்திரயான்-3 நிலவில் தரை இறங்கியது நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

ஒரு சிலரைத் தவிர்த்து, அதிமுகவுக்கு உழைத்தவர்கள் பிரிந்து சென்று, தற்போது கட்சிக்குக்குள் இணைய விரும்பினால், நிச்சயம் அவர்களை சேர்த்துக் கொள்வோம். ஆனால், கட்சி மூலமாக வளர்ந்த சிலர், கட்சிக்கு துரோகம் செய்துள்ளனர். இன்றைய ஆளுங்கட்சியுடன் சேர்ந்து அதிமுகவை அழிக்கநினைத்தவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை. இவ்வாறு பழனிசாமி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in