

கும்பகோணம்: டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி-20 மாநாட்டு முகப்பில்வைப்பதற்காக, சுவாமிமலையிலிருந்து நேற்று பிரம்மாண்டமான நடராஜர் சிலை டெல்லிக்குகொண்டு செல்லப்பட்டது.
டெல்லியில் செப். 9, 10-ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டு அரங்கின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட நடராஜர் சிலையை அமைக்க, மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்திதேசிய கலை மையம் முடிவு செய்தது. இதையடுத்து, கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் உள்ள தேவ சேனாதிபதி சிற்பக் கூடத்துக்கு இதற்கான பணி வழங்கப்பட்டது. ஸ்தபதிகள் தேவ.ராதாகிருஷ்ணன், தேவ.கண்டன், தேவ.சுவாமிநாதன் உள்ளிட்டோர் சிலையை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி தேசிய கலை மையத் தலைவர் ஆர்த்தல் பாண்டியா தலைமையிலானஅலுவலர்கள் ஜவகர் பிரசாத், மனோகன் தீட்சத் ஆகியோர் நேற்று சுவாமிமலை வந்து,நடராஜர் சிலையை ஸ்தபதிகளிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
பின்னர், முழுவதும் துணியால் போர்த்தப்பட்டிருந்த இந்த சிலை, 5-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரியில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, பலத்தபாதுகாப்புடன் புறப்பட்டு, உளுந்தூர்பேட்டை, சேலம், பெங்களூரு வழியாக டெல்லிக்கு வரும் 28-ம்தேதி சென்றடைகிறது. முன்னதாக, சுவாமிமலையிலிருந்து புறப்பட்ட இந்த சிலையை அப்பகுதி மக்கள்மலர்கள் தூவி வணங்கினர்.
இது தொடர்பாக சிலையை வடிவமைத்த ஸ்தபதிகள் கூறியதாவது: தற்போது இந்த சிலையின் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. சிலைக்கு மெருகூட்டுவது, கண் திறப்பு போன்ற மீதமுள்ள 25 சதவீத பணிகள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட பின் மேற்கொள்ளப்படும். இதற்காக15 ஸ்தபதிகள் இங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கின்றனர்.
25 டன் எடை: செம்பு, பித்தளை, இரும்பு, ஈயம்,தங்கம், வெள்ளி, வெள்ளீயம், பாதரசம் ஆகிய 8 உலோகங்களைக் கொண்ட அஷ்ட தாதுக்களால் இந்தசிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 28 அடி உயரம்,21 அடி அகலம், 25 டன் எடை கொண்டது. இதன் மதிப்பு சுமார்ரூ.10 கோடி. உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை, இந்த சிலையாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.