உடல் நலக்குறைவால் துபாயில் உயிருக்கு போராடிய தமிழர்: விமானத்தில் சென்னை அழைத்துவரப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக்குறைவால் துபாயில் உயிருக்கு போராடிய தமிழர்: விமானத்தில் சென்னை அழைத்துவரப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

சென்னை: உடல்நலக் குறைவால் துபாயில் உயிருக்குப் போராடிய தமிழரை, விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து அரசு மருத்துவமனையில் சேர்த்த தமிழக அரசுக்கும், சமூக ஆர்வலருக்கும் அவரது மனைவி நன்றி தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம்லெப்பை குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபியுல்லா. இவரது மனைவி ஷாமிலா பானு. இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு சபியுல்லா துபாய்க்கு வேலைக்குச்சென்றார்.

கடந்த 3 மாதங்களாகச் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டுவந்த சபியுல்லா, துபாயில் உள்ளமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரை அருகிலிருந்து கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால், உயிருக்குப் போராடி வரும் தனதுகணவரை, மேல் சிகிச்சைக்காகத் தமிழகம் அழைத்து வர, அவரதுமனைவி ஷாமிலா பானு சென்னைராயப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தனியார் வங்கி மேலாளருமான முகமது அலி ஜின்னாவின் உதவியை நாடினார்.

பின்னர் ஜின்னா, வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அலுவலகத்தை அணுகி, சபியுல்லாவை தமிழகம் அழைத்து வருவதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தார். இதையடுத்து 3 மணிநேரத்தில் வெளிநாடு வாழ் தமிழர்நலத் துறை அலுவலகத்திலிருந்து துபாய்க்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு, சபியுல்லாவை தமிழகம் அனுப்பக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர், சிறப்பு அனுமதியுடன் விமானத்தில் படுக்கை வசதியுடன்கூடிய இருக்கை சபியுல்லாவுக்குஒதுக்கப்பட்டு, ஒரு மருத்துவர் உதவியுடன் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்தில் ஆம்புலன்ஸுடன் தயார் நிலையில் இருந்த முகமதுஅலி ஜின்னா, சபியுல்லாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

தனது கணவரைத் தமிழகம் அழைத்து வர உதவிய சமூக ஆர்வலர் முகமது அலி ஜின்னா மற்றும் தமிழக அரசுக்கு அவரது மனைவி நன்றி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in