

சென்னை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனிடையே, எரிபொருள் விலை உயர்வு, பொது போக்குவரத்து சேவையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம், புதிய மோட்டார் வாகன சட்டத்தால் அபராதம் அதிகரிப்பு போன்ற பல்வேறுபிரச்சினைகள் இருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, சிஐடியு-வின்கீழ் செயல்படும் ஆட்டோ-டாக்ஸி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் தலைமைச்செயலகத்தை நோக்கி நேற்று பேரணி நடைபெற்றது. எழும்பூர்பழைய சித்ரா திரையரங்கம் அருகேபேரணியை சிஐடியு மாநிலச்செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் தொடங்கி வைத்தார். அங்கிருந்துலேங்ஸ் தோட்டச் சாலை சந்திப்புவரை கோரிக்கைகளை முழக்கமிட்டவாறே ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணியாக சென்றனர். அதன்பிறகு செல்ல போலீஸார் அனுமதிக்காத நிலையில், அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம் கூறும்போது, ‘‘விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 2 ஆண்டுகள் முடிய உள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரிடம் கேட்டபோது, மீட்டர் கட்டண உயர்வு தொடர்பான அறிக்கையை முதல்வருக்கு அனுப்பியதாக தெரிவிக்கிறார். எங்களது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.
ஆன்லைன் அபராதம் விதிப்பதில் ஆட்டோவுக்கு விலக்கு, புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறுதல், ஆட்டோ முன்பதிவுசெயலி, பைக் டாக்ஸி, மெட்ரோவின் பச்சை நிற ஆட்டோவுக்கு தடை, புதிய ஆட்டோவுக்கு ரூ.10 ஆயிரம் என்னும் தேர்தல் வாக்குறுதி போன்றவற்றை அரசு நிறைவேற்றித் தரவேண்டும்’’ என்றார்.