அண்ணா சாலை - ஜி.பி.சாலை சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்

அண்ணா சாலை - ஜி.பி.சாலை சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: சென்னை அண்ணாசாலை மற்றும் ஜி.பி.சாலையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நாளை (27-ம் தேதி) முதல் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை போக்குவரத்து காவல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வெஸ்ட் காட் சாலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் வரும் 27-ம் தேதி முதல் ஜி.பி.சாலை வழியாக அண்ணாசாலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே திருப்பி விடப்பட்டு, வைட்ஸ் ரோடு மற்றும் ஸ்மித் சாலை வழியாக அண்ணாசாலைக்கு சென்றடையும். இருசக்கர வாகனங்கள் வழக்கம்போல ஜி.பி.சாலை வழியாகவே அண்ணாசாலைக்கு செல்லலாம்.

அதேபோல, ஜி.பி.சாலை வழியாக அண்ணாசாலைக்கு அனுமதிக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் வலது பக்கம் திரும்பி டேம்ஸ் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இவை இடது பக்கம் திரும்பி அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பில் யு-திருப்பம் செய்து அண்ணாசாலை, டேம்ஸ் சாலை வழியாக செல்ல வேண்டும்.

அண்ணாசாலை - வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம்போல ஜி.பி.சாலையில் அனுமதிக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக செல்ல முடியும். அதேநேரம், அண்ணாசாலை - வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி.சாலை சந்திப்பில் யு திருப்பம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

இவை நேராக அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பில் யு திருப்பம் செய்து அண்ணாசாலை, டேம்ஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும். மேலும் ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து ஜி.பி.சாலை நோக்கி வரும் வாகனங்கள் டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை வழியாக சென்று ஜி.பி.சாலையை அடையலாம். போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in