

சென்னை: தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக ராமநாதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக முதல்வர் 10 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், மீன்பிடித் தடைக்கால நிவாரண தொகை உயர்வைத் தவிர மற்ற 9 அம்சங்களும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன.
மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இதுவரை அறிவிக்காத சில திட்டங்கள் உள்ளன. மீனவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்கள் எளிதில் கடன் பெறவும் மீனவர்கள் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும் எனத்தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை அது செயல்படுத்தப்படவில்லை. அதேபோல், மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அவற்றை நிறைவேற்ற வேண்டும்.
மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. ஒருபுறம்வேலை இழப்பு மறுபுறம் விலைவாசி உயர்வு என மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இதில், மீனவர்களின் வாழ்வாதாரமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிகள் காரணமாக மீன்பிடி உபகரணங்கள் அனைத்தும் பல மடங்கு உயர்ந்து வருகின்றன. மீன் பிடிப்பதற்கான மூலதன செலவும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், விலைவாசி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசெப்.7-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாகமறியல் போராட்டம் நடத்துகிறது. இதில், தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பும் பங்கேற்கிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.