

தஞ்சாவூர்: வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து அடிமைகளையும், அவர்களது எஜமானர்களையும் துரத்த வேண்டும் என திமுக மாநில இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூர் தெற்கு, வடக்கு, மத்திய, மாநகர மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் தஞ்சாவூர் திலகர் திடலில் நேற்று நடைபெற்றது. எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமை வகித்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பிக்கள் செ.ராமலிங்கம், எஸ்.கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை, மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், மாநில விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது: நீட் தேர்வு விவகாரத்தில் 21 மாணவர்களை நாம் இழந்துள்ளோம். தேர்தல் நேரத்தில் கூறியதுபோல, நீட் தேர்வை ரத்து செய்வோம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த விவகாரத்தில் நியாயமான முறையில் பார்த்தால், எதிர்க்கட்சியான அதிமுக தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். நீட் தேர்வு ரத்தாகும் வரை மாணவர்களுக்கு திமுக துணை நிற்கும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்த அடிமைகளை துரத்தி அடித்தது போல, வரும் மக்களவைத் தேர்தலில் அடிமைகளையும், அவர்களது எஜமானர்களையும் துரத்த வேண்டும் என்றார்.