கிருஷ்ணகிரி அணை மதகு உடைந்ததால் 2-ம் நாளாக 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்: மதகு கதவை உயர்மட்ட வல்லுநர் குழு ஆய்வு

கிருஷ்ணகிரி அணை மதகு உடைந்ததால் 2-ம் நாளாக 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்: மதகு கதவை உயர்மட்ட வல்லுநர் குழு ஆய்வு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அணையின் உடைந்த மதகு கதவை வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்தனர். உடைந்த மதகு கதவில் நீர் அழுத்தத்தை குறைக்கும் வகையில் மேலும் 6 மதகுகள் வழியாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீ்ர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணையில் உள்ள 8 பிரதான மதகுகளில், முதல் மதகின் கதவு நேற்று முன்தினம் மாலை உடைந்து அதன் வழியே நீர் வெளியேறியது. இதனால், அந்தப் பகுதியில் ஏற்பட்ட நீர் அழுத்தத்தை குறைக்கும் வகையில் 5-வது மதகின் வழியே நீர் திறக்கப்பட்டது. முதல் மதகு மற்றும் 5-வது மதகுகள் வழியாக விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி யது.

இந்நிலையில், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் முருகு சுப்பிரமணியன் தலைமையில் பெண்ணையாறு வடி கால் வட்ட கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பொதுப்பணித் துறை பராமரிப்பு, இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்த உயர்மட்ட வல்லுநர் குழுவினர் நேற்று சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வந்தனர். அணை யில் உடைந்த மதகு கதவை அவர்கள் பார்வையிட்டனர்.

உடைந்த மதகு கதவின் வெளியேறும் நீரின் அழுத்தத்தை மேலும் குறைக்கும் வகையில், சிறிய மதகுகள் வழியாக நீர் வெளியேறுவதை நிறுத்திவிட்டு, 2, 3, 5, 6, 7, 8-வது மதகுகள் வழியாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்ற அறிவுறுத்தினர்.

இதையடுத்து, 2-வது நாளாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர், உடைந்த 1-வது மதகு மற்றும் கூடுதலாக 6 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கிருஷ்ணகிரி அணைக்கு வந்தார். உடைந்த மதகு கதவைப் பார்வையிட்ட அவர், வல்லுநர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் முருகு சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘60 ஆண்டுகளாக மதகு கதவுகள் எவ்வித சேதமும் இல்லாமல், உறுதியாக இருந்துள்ளன. கடந்த 6 மாதங்களாக 51 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. முதல் மதகில் 20 அடிக்கு கீழ் அதிக நீர் உந்துதல் காரணமாகவோ, ஏதேனும் கதவில் மோதியதன் காரணமாகவோ உடைந்து இருக்கலாம். 2 நாட்களில் 37 அடி வரை நீர் வெளியேறிய பிறகுதான் மதகு கதவில் உடைப்பு ஏற்பட்டதற்கான முழுமையாக காரணம் தெரியவரும்’’ என்றார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறும்போது, ‘‘அணையில் இருந்து 5 அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அணையின் நீ்ர்மட்டம் 51 அடியில் இருந்து 46 அடியாக குறைந்துள்ளது. முதல் கட்டமாக, உடைந்த மதகு கதவுக்கு சீல் வைக்கப்பட்டு, நீர் வெளியேறுவது தடுக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in