Published : 25 Aug 2023 06:17 AM
Last Updated : 25 Aug 2023 06:17 AM
அஞ்சல்தலை உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், பள்ளிமாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளி மாணவர்களிடையே அஞ்சல்தலை சேகரிப்பை ஊக்குவிக்க, இந்திய அஞ்சல்துறை ‘தீன்தயாள் ஸ்பார்ஷ் யோஜனா’ என்ற அஞ்சல்தலை உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன்படி, அஞ்சல்தலை சேகரிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், இந்த ஆண்டுக்கான அஞ்சல்தலை உதவித் தொகை பெற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
அஞ்சல்தலை வினாடி-வினா மற்றும் அஞ்சல்தலை திட்டம் என்ற இரண்டு நிலைகளில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். மண்டல அளவிலான அஞ்சல்தலை வினாடி-வினா போட்டி அக்டோபர் மாதம் 5-ம் தேதி நடைபெறும். இதில் தேர்வு பெறும் மாணவர்கள் இரண்டாம் நிலையான அஞ்சல்தலை திட்டத்தில் தங்கள் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் மாதம் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் உள்ள அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தையோ அல்லது 044-28543199 என்றஎண்ணிலோ அல்லது annaroadho-dop@nic.in என்ற இ-மெயில் மூலமாகவோதொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT