

சென்னை: சூரிய சக்தியில் இயங்கும் வகையில் 5 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை சோதனை அடிப்படையில் செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக எரிசக்தித் துறைச் செயலர் (பொறுப்பு) ரமேஷ்சந்த் மீனா பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 லட்சம் மெகாவாட் சூரிய மின்சக்தி தயாரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்தமிழகத்தில் உள்ள 20 ஆயிரம்விவசாய மின் இணைப்புகளை சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்படவுள்ளது.
தமிழகத்தில், ஏற்கெனவே 22.15லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இணைப்புகள் மூலம் 12,632மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான இணைப்புகள் ஊரகப் பகுதிகளில் இருப்பதால் மின் செல்லும் வழித்தடத்தில் மின் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசின் திட்டத்தைப் பயன்படுத்தலாம் என மின்வாரிய தலைவர் முன்மொழிந்துள்ளார்.
எனவே, சோதனை அடிப்படையில் 5 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை சூரிய சக்தி மூலம்இயங்கும் வகையில் மாற்றியமைக்கும் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளிக்கிறது. இதற்கான 30 சதவீத நிதியை மத்திய அரசும், 30 சதவீத நிதியை மாநில அரசும் வழங்கும். மீதமுள்ள 40 சதவீத நிதியை டான்ஜெட்கோ உதவியுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன்பெற்று விவசாயிக்கு வழங்கப்படும்.
இதன்மூலம் சிறிய அளவில் அமைக்கப்படும் சூரிய மின்சக்தி நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பாசன பணிகளுக்கு பயன்படுத்தப்படும். மீதமுள்ள மின்சாரத்தின் மூலம் பெறப்படும் தொகையை யூனிட் மின்சாரத்துக்கு ரூ.2.28 வீதம் கடன் முழுமையாக அடைக்கப்படும் வரை வங்கிக்கு மின்வாரியம் செலுத்தும். மேலும், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.0.50 வீதம் விவசாயிக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.