Published : 29 Dec 2017 09:14 PM
Last Updated : 29 Dec 2017 09:14 PM

மைனாரிட்டி அரசை ஆதரிக்கும் மத்திய அரசை கண்டித்து சட்டசபையில் செயல்படுவோம்: மு.க.ஸ்டாலின் பேட்டி

பெரும்பான்மை இல்லாத அதிமுக ஆட்சியை வேடிக்கைப் பார்க்கும் மத்திய அரசை கண்டிக்கும் வகையில் சட்டமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்கும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்திற்குப் பிறகு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இன்றைய அரசியல் நிலவரம் குறித்து அதிலே பேசப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு குறித்தும், 2ஜி வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு குறித்தும், கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ஓகி புயல் குறித்தும், அதற்குப் பிறகு நடந்து முடிந்திருக்கின்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் ஆற்றியிருக்கின்ற பணிகள் மற்றும் அதிலே எங்காவது தவறுகள் நடைபெற்று இருக்கிறதா? இல்லையா என்பது பற்றி ஆய்வு நடத்தி அதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் விரிவாக பேசப்பட்டு இருக்கிறது.

2ஜி தீர்ப்பை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதற்கு ஏதேனும் கூட்டங்கள் நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறதா?

இன்னும் 4, 5 நாட்களில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட இருக்கின்றோம். அந்தக் கூட்டத்தில் நீங்கள் கேட்ட கேள்வி பரிசீலிக்கப்பட்டு உரிய வகையில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை வருவதற்கு முன்பே, தவறு நடந்திருப்பதாக உங்களுக்கு தகவல் வந்தது எனவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

தவறு நடந்திருப்பதால் தான் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. குழு ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஆய்வுப் பணிகள் முடிந்து அறிக்கை வந்தவுடன் அதற்குப் பிறகு நாங்கள் கலந்துபேசி உரிய வகையில் நடவடிக்கை எடுப்போம்.

என்ன மாதிரியான நடவடிக்கையாக இருக்கும்?

என்ன மாதிரியான தவறுகள் நடந்து இருக்கிறதோ, அதற்கேற்றார்போல் நடவடிக்கைகள் இருக்கும்.

ஜனவரி 8-ம் தேதி, சட்டமன்றம் கூட இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நீங்கள் என்ன மாதிரியான பிரச்சினைகளை முன்னெடுத்து வைக்கப் போகிறீர்கள்?

நியாயமாக, மெஜாரிட்டி இல்லாமல் மைனாரிட்டியாக இருக்கின்ற இந்த ஆட்சியே இருக்கக்கூடாது என்று தான் தீர்மானம் கூட நிறைவேற்றி இருக்கிறோம். மெஜாரிட்டி இல்லாத ஒரு அரசை மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆகவே அதை கண்டிக்கின்ற வகையில் இந்தப் பிரச்சினையையும் மையமாக வைத்து சட்டமன்றத்தில் நாங்கள் எங்கள் கருத்துகளை விவாதிப்போம்.

ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்து மத்தியக் குழு ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். அது போதிய அளவுக்கு இருக்குமென நினைக்கிறீர்களா?

மத்திய அரசு ஏறக்குறைய 40 நாட்களுக்கு பிறகு தான் ஒக்கி புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைத்திருக்கிறது. மாநில அரசு 13,520 கோடி ரூபாய் நிதி கேட்டிருக்கிறது. அந்த நிதியை உடனடியாக கொடுக்க வேண்டுமென சொல்லி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வலியுறுத்தி இருக்கிறேன். அதுமட்டுமல்ல கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வுக் குழுவை சந்தித்து இருக்கிறார்கள்.

நானும் என் கடிதத்தை கொடுத்து இருக்கிறேன். அதையும் அவர்களிடத்தில் வலியுறுத்தப்பட்டு உரிய வகையில் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அந்த உறுதியை காப்பாற்றி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நிற்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பரிகாரத்தை காண வேண்டுமென நான் தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.

அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் ஒரு இணக்கமான உறவில் இருக்கிறார்கள் என பேசப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ பா.ஜ.க வை மதவாதக் கட்சி அதனோடு கூட்டணி கிடையாது என விமர்சித்துப் பேசியிருக்கிறாரே?

ஒவ்வொரு அமைச்சரும் கோமாளித்தனமாக பேசிக் கொண்டிருப்பதற்கு எல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரத்தை நான் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள். இது சம்பந்தமாக வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறதா?

இது இப்போது மட்டும் இல்லை, தேர்தல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஏன், உயர்நீதிமன்றத்தில் வழக்கும் போட்டிருக்கிறோம். இப்போது தேர்தல் முடிவு வந்ததற்குப் பிறகு இதுகுறித்து சிந்தித்து சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செய்து நீதிமன்றத்தை நாடுவதற்கு முடிவு செய்திருக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x