Published : 25 Aug 2023 06:11 AM
Last Updated : 25 Aug 2023 06:11 AM
சென்னை: சென்னை பெசன்ட் நகர் அன்னைவேளாங்கண்ணி ஆலயத்தின் பொன்விழா மற்றும் ஆண்டு பெருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்.7-ம் தேதி தேர் பவனி நடைபெற உள்ளது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் பொன்விழா மற்றும் ஆண்டு பெருவிழா வரும் 29-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 5.45 மணிக்கு சென்னை மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மாதா கொடியை ஏற்றிவைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து, தினமும் மாலை 5.30 மணிக்கு நவநாள் ஜெபம், சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனையை பாதிரியார்கள் நடத்த உள்ளனர். உழைப்பாளர் விழா, நலம்பெறும் விழா, இளையோர் விழா, பக்தசபை விழா, நற்கருணை பெருவிழா, இறையழைத்தல் தினம், ஆசிரியர்கள் தினம், குடும்ப விழா என்ற தலைப்புகளில் இந்த விழாக்கள் கொண்டாடப்பட உள்ளன.
செப்.7-ம் தேதி வியாழக்கிழமை ஆடம்பர தேர் பவனி நடைபெற உள்ளது. இதை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தொடங்கி வைத்து, சிறப்பு வழிபாட்டையும் நடத்துகிறார். செப்.8-ம் தேதி மாதாவின் பிறப்பு பெருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5.30மணி அளவில் மாதாவுக்கு முடிசூட்டு விழாவும், கொடியிறக்க நிகழ்வும் நடைபெற உள்ளது.
உலக அமைதிக்காகவும், சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்டவும், சமய, சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றவும் இந்த விழாவில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன என்று அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் பாதிரியார் வின்சென்ட் சின்னத்துரை தெரிவித்தார். அப்போது, பாதிரியார்கள் பிரான்சிஸ் சேவியர், அலெக்ஸ் சகாயராஜ், மைக்கேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT