Published : 25 Aug 2023 04:04 AM
Last Updated : 25 Aug 2023 04:04 AM

தனபால் குற்றச்சாட்டு அடிப்படையில் கோடநாடு வழக்கு விசாரணை: ஓபிஎஸ் அணி வலியுறுத்தல்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ். படம்: நா.தங்கரத்தினம்

மதுரை: கோடநாடு கொலை வழக்கில் பல்வேறு புதிய தகவல்களை தெரிவிக்கும் கனகராஜின் சகோதரர் தனபாலின் குற்றச்சாட்டு அடிப்படையில் வழக்கை விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அணி கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வராக கே.பழனிசாமி இருந்தபோதுதான் கோடநாடு சம்பவம் நடந்துள்ளது. மின் இணைப்பைத் துண்டித்து கேமராக்களை செயல் இழக்க செய்து காவலாளியை கொலை செய்துள்ளனர்.

சிசிடிவி கேமராக்களை கண்காணித்த தினேஷ் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்மமான முறையில் இறந்துள்ளார். கோடநாடு சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர்இப்படி மர்மமான முறையில் இறந்துள்ளனர். கனகராஜ் உயிரிழப்பதற்கு முன் 5, 6 மூட்டைகளில் ஆவணங்களை வைத்திருந்ததாக அவரது சகோதரர் தனபால் தற்போது கூறியுள்ளார்.

மேலும், ஆவண மூட்டைகளுடன் கனகராஜ் இருந்ததை நான் பார்த்தபோது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்தார். அவர் தெரிவித்தது போலவே கனகராஜ் உயிரிழந்து விட்டார் என தனபால் கூறியுள்ளார். திமுக ஆளுங்கட்சியாக உள்ள நிலையில் என்னை இந்த தகவல்களைச் சொல்லக் கூடாது என்று போலீஸாரும் சேர்ந்து தடுப்பதாக தனபால் கூறியுள்ளார்.

தனபால் குற்றச்சாட்டின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின், இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும். தனபாலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்குவதோடு கோடநாடு வழக்கை துரிதமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x