

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. குப்பை பராமரித்தல் மற்றும் தரம் பிரித்தல் ஆகிய பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2014-ம் ஆண்டுக்கான ஐஎஸ்ஓ 14001:2014 தரச் சான்றிதழ் பெற்று திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பான பேரூராட்சியாக விளங்கி வருகிறது அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி.
இதுகுறித்து, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது, “காஞ்சி புரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 2,800 வீடுகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் 6 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணிபுரிவதால் 2012-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் மூலம் பேரூராட்சி வார்டுகளில் குப்பை அகற்றும் பணி மேற்கொண்டோம். குப்பை அகற்றும் பணிகளில் 2 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 26 பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை பசுமை நண்பர்கள் என அழைக்கின்றோம். இவர்கள், 300 வீடுகளுக்கு ஒரு நபர் என ஒவ்வொரு வீடுக்கும் நேரடியாக சென்று தினந்தோறும் குப்பை சேகரிக்கின்றனர். அதன் மூலம், பேரூராட்சியில் தினசரி 3 டன் குப்பை சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. அதனால், பேரூராட்சி குப்பையில்லா பேரூராட்சியாக விளங்கி வருகிறது. தற்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஐஎஸ்ஓ 14001:2014 என்ற சான்றிதழ் கிடைத்துள்ளது” என்றார்.
இதுகுறித்து, திடக்கழிவு மேலாண்மை திட்ட இயக்குநர் பரிசுத்தம் கூறுகையில், “பசுமை நண்பர்கள், வீடுகளில் வசிக்கும் பெண்களிடம் குப்பையை தரம்பிரித்துத் தருமாறு கூறினர். ஆனால், தொடர்ந்து குப்பை தரம் பிரிக்கப்படாமல் அப்படியே அளிக்கப்பட்டது. குப்பையை எவ்வாறு தரம் பிரிப்பது என அறிந்து கொண்ட மக்கள் தற்போது தாங்களாகவே குப்பையை தரம் பிரித்து அளித்து வருகின்றனர். இதில், மட்கும் குப்பையை இயற்கையான முறையில் மட்க வைத்து அதில், இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்கிறோம். வீடுகளில் சேகரிக்கப்படும் உணவு கழிவுகளை சேகரித்து வைத்து அதில் இருந்து பயோகேஸ் தயாரித்து, இங்கே பணிபுரியும் பசுமை நண்பர்களின் சமையல் வேலைக்கு பயன்படுத்தி வருகிறோம். மேலும், பேரூராட்சி அலுவலகத்தை சுற்றி வீட்டுத் தோட்டம் அமைத்துள்ளோம். இதில், ஏராளமான காய்கறி மற்றும் கீரை வகை செடிகளை நட்டு வளர்த்து வருகிறோம். அவற்றுக்கு, இங்கே தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை தெளிப்பதால் நல்ல மகசூல் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.