Published : 21 Dec 2017 06:10 PM
Last Updated : 21 Dec 2017 06:10 PM

ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நேரம் முடிந்தது: அலை அலையாய் டோக்கன் வாங்கி காத்திருக்கும் வாக்காளர்கள்

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்தது. ஆனால் வாக்காளர்கள் அலை அலையாய் வந்ததால் டோக்கன் கொடுத்து வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் காலியான ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று வாக்குப்பதிவு, வரும் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது.

சென்னை ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். பல வாக்குச்சாவடிகளில் லேசான மோதல் இருந்தாலும் பெரிய அளவில் வாக்குச்சாவடிகளில் பதற்றமின்றி வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் 2016-ல் வெற்றிபெற்ற ஜெயலலிதா மரணமடைந்ததை ஒட்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக வசம் இருக்கும் தொகுதியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் கட்சியும், மீண்டும் ஆர்.கே.நகரில் கால் பதிக்கவேண்டும் என்று திமுகவும் மல்லுக்கட்டி நிற்கும் ஆர்.கே.நகரில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். 1 லட்சத்து 10 ஆயிரத்து 903 ஆண் வாக்காளர்கள், 1லட்சத்து 17ஆயிரத்து 232 பெண் வாக்காளர்கள், 99 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். வாக்களிக்க மொத்தம் 258 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்திலும் கண்காணிப்புக்கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 258 வாக்குச்சாவடி மையங்களும் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. ஆனாலும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி வாக்குப்பதிவு நடந்தது.

காலை 7 மணி முதலே வாக்காளர்களால் நிரம்பி வழிந்த வாக்குச்சாவடிகள் மாலை 5 மணி வரை அதே நிலையிலேயே இருந்தது. காலை முதலே வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்த நிலையில் மதியம் 3 மணி அளவில் 60 சதவீதத்தை அடைந்தது. 4 மணிக்கு 65 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்நிலையில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. ஆனாலும் 60-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நூற்றுக்கணக்கில் நின்றதால் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்னரும் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வழங்கப்பட்டவர்கள் நிற்கும் வரையில் வாக்குப்பதிவு நடக்கும்.

மாலை 5 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குப்பதிவு ஆகியுள்ள நிலையில் மீதமுள்ள வாக்காளர் பதிவு சேர்த்தால் 75 சதவீதத்தை நெருங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x