

கோவை: கோவையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்த முயன்ற முற்போக்கு அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று (ஆக.24) நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டம் வழங்கினார். முன்னதாக, ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடக் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் லாலி சாலை சந்திப்புப் பகுதியில் முற்போக்கு அமைப்பினர் சார்பில் காலை கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நீட் தேர்வு விலக்குக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தல், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் நிலுவை வைத்திருத்தல், மாநில பொதுபாடத் திட்டத்தை பல்கலைக்கழகங்கள் ஏற்க வேண்டியது இல்லை என்று அறிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆளுநரை கண்டித்து இந்த கருப்புக்கொடி போராட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தபெதிக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை ஆர்.எஸ்.புரம் போலீஸார் கைது செய்தனர்.