‘தீர்ப்பை பார்த்து 3 நாட்களாக தூங்கவில்லை’: அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி கருத்து

‘தீர்ப்பை பார்த்து 3 நாட்களாக தூங்கவில்லை’: அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி கருத்து
Updated on
2 min read

சென்னை: தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த 2006-11 காலகட்ட திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வுநீதிமன்றம் கடந்த 2022 டிசம்பரில் தீர்ப்பளித்தது.

இதேபோல, தற்போதைய வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கடந்த 2006-11 காலகட்ட திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.44.56 லட்சம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி பி.விசாலாட்சி, அமைச்சரின் நண்பர் கேஎஸ்பி சண்முகமூர்த்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் 2012-ம் ஆண்டு வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில்இருந்து சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப் பளித்தது.

இவ்வாறு 2 அமைச்சர்களையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து(‘சூமோட்டோ’) வழக்காக எடுத்துள்ளார். அவர் முன்பு இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்குவந்தன.

அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி தெரிவித்ததாவது: அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளின் விசாரணை நடைமுறையில் எந்த தவறும் இல்லை. இந்த வழக்குகளில் லஞ்ச ஒழிப்பு துறையின் விளக்கங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பித்தால், அது அந்த அதிகாரிகளை களங்கப்படுத்தியதாகி விடும். உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றியே இந்த உத்தரவுகளை கீழமை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கீழமை நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து இதுபோல தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தால், தவறான முன்னுதாரணமாகிவிடும். தவிர, இதுபோல தாமாக முன்வந்து எடுக்கப்படும் வழக்குகள் வேறு நீதிபதிகளின் முன்பாகவே விசாரணைக்கு பட்டியலிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்க கோரி அவர்கள் 2 பேரும் தாக்கல் செய்த மனுவுக்கு 2021 ஏப்ரல் வரை கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருவரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றதும் அப்படியே ‘யூ-டர்ன்’ போட்டு வழக்கின் திசையை மாற்றிவிட்டுள்ளனர்.

இந்த வழக்குகளில் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அதன்பிறகு வழக்குகளை முடித்து வைக்க கோரி மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். விசாரணை நீதிமன்றமும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு, அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை விடுவித்து தீர்ப்பளித்தி ருப்பது துரதிர்ஷ்டவசமானது. அதன்பிறகு இந்த வழக்குகளின் ஆவணங்களை ஆராய்ந்த போது, ஸ்ரீவில்லி புத்தூர் நீதிமன்றத்தில் ஏதோ நடந்திருப்பதை உணரமுடி கிறது. இந்த வழக்குகளில் தவறான நடைமுறையை கீழமை நீதிமன்றம் பின்பற்றியுள்ளது.

இரண்டு வழக்குகளிலும் 2012-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளை விசாரணை நீதிமன்றம் புறம்தள்ளி இருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் இந்த 2 வழக்குகளிலும் அப்படியே தங்கள் நிலைப்பாட்டை மாற்றியிருப்பது ஏற்புடையதல்ல. எனவே, இந்த வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் மற்றும் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரும் செப்.20-க்குள் பதில் அளிக்க வேண்டும், இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

‘தீர்ப்பை பார்த்து 3 நாட்களாக தூங்கவில்லை’: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது: இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான இந்த விடுவிப்பு உத்தரவுகள் ஒரே மாதிரியாக காப்பி அடித்ததுபோல உள்ளன. பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் தீர்ப்பை படித்துப் பார்த்து 3 நாட்களாக நான் தூங்கவில்லை. நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கும் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால், அது கடமையை செய்ய தவறியதாகிவிடும்.

இந்த நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. நாட்டில் வாழும் சாமானிய மக்களுக்கு உரித்தானது. அதேபோல, நானும் தனிப்பட்ட முறையில் முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவில்லை. யார் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தாலும், வழக்குகளை நீர்த்துப்போக செய்துவிடுகின்றனர். தவிர, இதுபோன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in