திமுக எம்.பி கவுதமசிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக 90 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் - அமலாக்கத் துறை நடவடிக்கை

திமுக எம்.பி கவுதமசிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக 90 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் - அமலாக்கத் துறை நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: செம்மண் குவாரி மூலமாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி திமுக எம்.பியும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை 90 பக்க குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்த, தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், தற்போதைய கள்ளக்குறிச்சி திமுக எம்பியுமான கவுதமசிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன் உள்ளிட்டோர் செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ. 28 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ல் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் லோகநாதன் மட்டும் இறந்து விட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் அடிப்படையில் சட்ட விரோதபணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் திமுக எம்பி கவுதமசிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாககடந்த மாதம் அமைச்சர் பொன்முடியின் வீ்ட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கவுதம சிகாமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் திமுக எம்பிகவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்குஎதிராக அமலாக்கத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in