

சமூகத்தில் நல்ல கல்வி கற்று, மதிப்பான பதவியிலும் இருக்கும் ஒரு இளைஞன் 6 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொலை செய்து சிறை செல்வதும், பின்னர் அதே இளைஞன் ஜாமீனில் வெளிவந்த பின்னர் பெற்ற தாயைக் கொன்று விட்டு தப்பிச்சென்றதும் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரு பார்வை.
கடந்த பிப்ரவரியில் குன்றத்தூரில் ஹாசினி என்ற 6 வயது சிறுமி கொடூரமாக கொலைசெய்யப்பட்டு கிடந்தார். அவரது மரணத்திற்கு காரணமாக சற்றும் யாரும் எதிர்பார்க்காத பக்கத்து வீட்டு சாஃப்ட்வேர் இன்ஜினீயரான இளைஞர் தஷ்வந்த் சிக்கினார்.
அதன் பின்னர் ஜாமீனில் வந்தவர் சில மாதங்களிலேயே, பெற்றெடுத்த தாயை பணத்திற்காக கொலை செய்யுமளவிற்கு சென்றிருக்கிறார்.
வானமே எல்லை என்ற வாழ்க்கைக் கனவுகளுடன் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சிறகு விரிக்கும் வயதில், பெற்ற தாய்க்கு மட்டுமின்றி மொத்த பெண் சமுதாயத்திற்கும் எதிரான இளைஞராய் மாறியிருக்கிறார் தஷ்வந்த் (24).
தஷ்வந்த் செய்த குற்றம் மன்னிக்க முடியாத குற்றம் தான், ஆனால் அதற்கான காரணங்கள் அவரை மட்டுமே சார்ந்ததா, சமுதாயப் பின்னணி உள்ளதா, வளர்ப்பு முறையில் வந்த பிரச்சினையா?, மாறி வரும் வாழ்க்கைசூழல் காரணமா? என்ற பல்வேறு கேள்விகளுடன் 'தி இந்து' இணையதளம் சார்பில் சமூக ஆர்வலரும், அறப்போர் இயக்கத்தின் நிர்வாகியுமான சந்திரமோகனிடம் கேட்டபோது, அவர் கூறியது:
''ஹாசினியின் வழக்கு பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழும், கொலை குற்றச் சட்டத்திற்கு கீழும் பதிவு செய்யப்பட வேண்டியது. ஆனால் போலீஸார் குண்டாஸ் சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை செய்தவரை கைது செய்தனர். அதனால்தான் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் இருந்து வாதாட முடியவில்லை. எனவே, அவர் மீது போடப்பட்ட குண்டாஸ் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது.
இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் மன நிலையை ஆராய்ந்த பின்னரே அவர்களை வெளியில் விடவேண்டும். கொடூர குற்றங்களை செய்துவிட்டு ஜாமீனில் வெளிவருபவர்களை கண்காணிக்க போலீஸாரோ இல்லை நீதிமன்றமோ யாரையும் நியமிப்பதில்லை. அதற்கு அவர்கள் போதிய ஆட்கள் இல்லை போன்ற காரணங்களை கூறினாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டியது போலீஸாரின் கடமை.
நீதித்துறை மீதும், காவல்துறை மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இதுபோன்ற சம்பவங்களால் குறைகிறதே? மக்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்?
எவ்வித பொறுப்புணர்வும் இல்லாமல் காவல்துறை நடந்து கொள்கிறது. சாக்ரடீஸ் காலத்தில் இருந்து இளைஞர்களை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இளைஞர்களின் மாற்றத்திற்கு சமுதாயத்தின் மாற்றமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எல்லா இளைஞர்களும் கெட்டவர்கள் அல்ல, வழிகாட்டுதலின்றி வளர்க்கப்படும் இளைஞர்களே இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஒரு இளைஞன் ஏன் அந்த குற்றச்செயலில் ஈடுபடுகிறான் என்று யாரும் யோசிப்பதில்லை. வேறு தொழில் தெரியாமல், பணத்திற்காக குற்றச்செயலில் ஈடுபடும் எத்தனையோ இளைஞர்கள் உள்ளனர். அவர்களை மீட்க அரசும் சமூகம் என்ன செய்துள்ளது?
அடுத்தடுத்த குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதால், பல குற்றங்களை நாம் மறந்து கடந்து சென்றுள்ளோம். நமது தேசிய வியாதி மறதி. இதற்கு ஒரே தீர்வு, காவல்துறையாக இருந்தாலும் சரி, நீதித்துறையாக இருந்தாலும் சரி குற்றத்தை கண்காணிக்கும் நபர்கள் இதற்கு பொறுப்புடைமை ஏற்க வேண்டும். பொறுப்புடைமையுடன் செயல்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
கொடூரக் குற்றச்சம்பவத்தில் ஈடுபடுபவர்களின் மன நிலையில் உள்ள பாதிப்புகளை குறித்து அரசு 104 உதவி மைய மனநல மருத்துவர் இளையராஜா ’தி இந்து’ தமிழ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியது:
“தஷ்வந்த் வழக்கைப் பொறுத்தவரை பெற்றோர் வளர்ப்பில் தான் பிரச்சினை இருந்திருக்கிறது. பெற்றோர் அதிக சுதந்திரம் கொடுத்தாலோ அல்லது அதிகாரமாக நடந்துகொண்டாலோ இது போன்ற மனநிலை குழந்தைகளிடம் வரக்கூடும். நல்ல செயல், தீய செயல் இவை இரண்டிற்குமான வித்தியாசத்தை பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
இளைஞர்கள் அதிகமாக தனிமை விரும்பிகளாக மாறிவிடுகிறார்கள். இன்றைய தலைமுறையை இணையதளம்தான் ஆண்டு வருகிறது. தனிமை, இணையதளம் இவை அனைத்தும் இவர்களை சமூகத்திடம் இருந்து விலகி இருக்க வைக்கிறது.
தஷ்வந்தின் மன நிலையில் உள்ள பாதிப்பை பொருட்படுத்தாமல் விடுதலை செய்துள்ளனர். வெளியே வந்த தஷ்வந்தை கண்டிப்பாக சமூகம் ஏற்றுக்கொண்டிருக்காது. அது மேலும் தஷ்வந்தின் மனநிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். இது இவரை மேலும் குற்றச் செயலில் ஈடுபடத் தூண்டும். மன நல ஆலோசனையால் மட்டுமே இவர்களை மீட்டெடுக்க முடியும்.”
இவ்வாறு அவர் கூறினார்.