டாஸ்மாக் கடைகளில் அவசரகதியில் வைக்கப்பட்ட விலை பட்டியல் - உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் அதிருப்தி

டாஸ்மாக் கடைகளில் அவசரகதியில் வைக்கப்பட்ட விலை பட்டியல் - உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் அதிருப்தி
Updated on
1 min read

மதுரை: மதுரையில் வழக்கறிஞர்கள் குழு ஆய்வுக்கு வருவதை தெரிந்துகொண்டு, டாஸ்மாக் கடைகளில் அவசர அவசரமாக விலைப் பட்டியல் வைக்கப்பட்டதாக உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுபான விற்பனை நேரத்தைக் குறைக்க வலியுறுத்தி, உயர் நீதிமன்றக் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும், அட்டை வைத்துள்ளோருக்கு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும், மது பாட்டிலின் மீதுள்ள லேபிள்களில் விலை விவரம், புகார் தெரிவிக்க வேண்டிய எண் ஆகியவற்றை தமிழில் அச்சிட்டு ஒட்ட வேண்டும், மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், மதுரையில் டாஸ்மாக் கடைகளில் அனைவருக்கும் தெரியும் வகையில் விலைப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா என்பதை வழக்கறிஞர்கள் குழு ஆய்வு செய்து, அறிக்கைதாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் குழு, தாங்கள் ஆய்வுசெய்த டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப் பட்டியல் வைத்திருப்பது தொடர்பாக, புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், மதுரை மாவட்டம் திருமங்கலம், செக்கானூரணி, வாடிப்பட்டி குருவிக்காரன்சாலை, கே.கே.நகர், மாட்டுத்தாவணி, பீபீகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் சென்று ஆய்வு செய்யப்பட்டது. அங்கு மதுபானங்களின் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டாஸ்மாக் தரப்பில், கூடுதல்விலைக்கு மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக 35 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், "வழக்கறிஞர் குழு ஆய்வை, முன்கூட்டியே தெரிந்துகொண்டு அவசரகதியில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டிருப்பது, அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போது தெரிகிறது. டாஸ்மாக் கடைகளில் நிரந்தரமாக மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in