

கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து காவல்துறை சார்பில், 50-க்கும் மேற்பட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் சிக்னல் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். இங்கு பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்கள் மைக் மூலம் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வசைபாடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
அவிநாசி சாலையில் சில இடங்கள் உட்பட மாநகரின் பல்வேறு இடங்களில் சிக்னல்களில் வாகன ஓட்டிகள் காத்திருப்பதை தடுக்க ‘யு-டர்ன்’ முறை செயல்படுத்தப் பட்டு வருகிறது. அதேசமயம் இந்த சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிந்தால் வாகன ஓட்டிகள் நின்று, பச்சை விளக்கு எரியும்போது தான் செல்ல வேண்டும்.
யு-டர்ன் திட்டம் அறிமுகப்படுத்தப்படாத நவஇந்தியா சந்திப்பு, அண்ணாசிலை சந்திப்பு, அரசு மருத்துவமனை சந்திப்பு உள்ளிட்ட மற்ற இடங்களில் வழக்கம் போல சிக்னல்கள் இயங்குகின்றன. லட்சுமி மில், ஹோப்கா லேஜ் உள்ளிட்ட இடங்களில் திரைப்பட பாடல்களின் பின்னணி இசை மட்டும் ஒலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து சிக்னல்களிலும் போக்குவரத்து காவலர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் வாகன ஓட்டிகளை உஷார்படுத்த மைக் கில் பேசும் வார்த்தைகள் முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது.
இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துவதாக கூறிக்கொண்டு அபத்தமாகவும், ஒருமையிலும், கவனத்தை திசை திருப்பும் வகையிலும் காவலர்கள் மைக்கில் பேசுகின்றனர்.
காலை முதல் இரவு வரை அறிவுரை என்ற பெயரில் இடைவிடாது அலறுவதால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இவர்கள் பேசாத நேரங்களில் மைக்கை ஆஃப் செய்வதில்லை. ஆன் செய்து இருக்கையில் வைத்து விடுகின்றனர். இதனால், அருகே நிற்கும் வாகனங்களின் ஹாரன் சத்தம், மைக் மூலம் ஒலிபெருக்கியில் எதிரொலிக்கிறது. சாலை என்பது வாகன ஓட்டிகள் உஷாராக செல்ல வேண்டிய இடம். சிக்னல் சந்திப்புகளில் பாடல்களின் பின்னணி இசையை ஒலிக்க விடுவது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவதாக உள்ளது.
மைக் மூலம் காவலர்கள் தேவையின்றி பேசுவதையும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பாடல்களை ஒலிப்பதையும் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ் ணனிடம் கேட்டதற்கு, ‘‘இதுதொடர்பாக சிக்னல் சந்திப்புகளில் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார்.