

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையில் 112 காவல் சிறார் மன்றங்கள் உள்ளன. சிறார்களின் நலன்களைப் பாதுகாத்து அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வதே இந்த சிறார் மன்றங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையின்கீழ் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் குறைந்தது ஒரு காவல் சிறார் மன்றம் அமைக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தி உள்ளார்.
இந்த காவல் சிறார் மன்றங்களில் உள்ள சிறார்களுக்கு கல்விச் செலவு உள்ளிட்ட அடிப்படை உதவிகளைச் செய்யவும் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். காவல் சிறார்மன்றங்களின் செயல்பாட்டை மேம்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து சென்னை பெருநகர காவல் துறை தேவையான நிதி உதவிகளைப் பெறுகிறது.
அந்த வகையில் ஹெச்சிஎல் (HCL)நிறுவனம், காவல் சிறார் மன்ற சிறுவர்களின் கல்வித்திறன், பொருளாதார பிரச்சினைகள் மற்றும் முன்னேற்றத்துக்கான ஆலோசனைகள் ஆகியவற்றுக்காக நிதியுதவி வழங்கி, சிறார் மன்றங்களை 3 ஆண்டுகள் பராமரிக்க முன்வந்துள்ளது. இது சம்பந்தமாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், அந்நிறுவனத்துடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார்.
இதையடுத்து சென்னை பெருநகர காவல் துறையில் இயங்கி வரும் 20 காவல்சிறார் மன்றங்களின் மேம்பாட்டுக்கான செலவுகளை ஹெச்சிஎல் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் எனக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.