

சென்னை: சென்னை மாநகர சாலையோரங்களில் கேட்பாரற்று கிடக்கும் 1,038 வாகனங்களை, அவற்றின் உரிமையாளர்கள் அகற்றாவிட்டால் செப்.1-ம் தேதி முதல் மாநகராட்சி அகற்ற முடிவு செய்துள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அகற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
அதில் அவர் பேசியதாவது: மாநகராட்சிப் பகுதிகளில் சென்னை போக்குவரத்து காவல் துறை, சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் பழுதடைந்த நிலையிலும், பொதுசுகாதாரத்துக்கு சீர்கேடு விளைவிக்கும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நீண்ட காலமாக கேட்பாரற்று நிற்கும்வாகனங்களை மோட்டார் வாகனச் சட்டம் 380-ன்படியும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 128-ன்படியும் அப்புறப்படுத்தி, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மாநகராட்சிப் பகுதிகளில் 1,038 வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து தங்களின்வாகனங்களை அப்புறப்படுத்தஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு அப்புறப்படுத்தப்படாத கைவிடப்பட்ட வாகனங்களை செப்.1-ம் தேதிமுதல் காவல் துறை உதவியுடன் அப்புறப்படுத்தி வடக்கு, மத்திய மற்றும் தெற்கு வட்டாரங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம் விடப்படும். எனவே, நீண்ட நாட்களாகக் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அகற்ற அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் (வருவாய் (ம) நிதி)ஆர்.லலிதா, மாநகர காவல் கூடுதல் ஆணையர் (போக்குவரத்து) ர.சுதாகர், இணை ஆணையர் (கிழக்கு) திஷா மிட்டல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.