Published : 24 Aug 2023 08:04 AM
Last Updated : 24 Aug 2023 08:04 AM
தாம்பரம் அருகே திருவஞ்சேரி ஊராட்சி வெங்கடேஸ்வரா அவென்யூ பகுதியில் சாலைகளே இல்லை. சாலை அமைக்கக்கேரி மனு கொடுத்தும் பலனில்லை இதனால் மழைக்காலங்களில் நடந்தோ, இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை.
இதுகுறித்து இந்து தமிழ் திசை நாளிதழ் உங்கள் குரல் பகுதியில் தொலைப்பேசி வாயிலாக வாசகர் ஒருவர் தெரிவித்த புகாரில் கூறியிருப்பதாவது:
திருவஞ்சேரி ஊராட்சியில் வெங்கடேஸ்வரா அவென்யூ உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் முறையாக சாலை அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை கோரிக்கை மனு அளித்துவிட்டோம். ஆனால் சாலை அமைக்கவில்லை.
சிறு மழை பெய்தாலே குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. நாங்களே சாலை அமைக்கலாம் என முடிவு செய்து கட்டிடகழிவுகளை சாலையில் கொட்டி சமன் செய்யமுயன்றபோது உள்ளூரில் சில அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதியிலேயே விட்டு விட்டோம். கடந்த 2017-ம் ஆண்டு இங்கு வீட்டு மனை அமைக்கப்பட்டது.
அப்போது விதிகளை மீறி வீட்டு மனை அமைக்கப்பட்டதால், தற்போது இங்கு வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.
இதுகுறித்து ஆட்சியரிடம் விரிவாக புகார் கொடுத்தோம். ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாலும் உள்ளூர் பிரமுகர்கள் சிலர் இடையூறு செய்கின்றனர். ஆட்சியர் வந்து ஆய்வு செய்து எங்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, ஊராட்சியில் போதிய நிதி ஆதாரம் இல்லை. இதனால் சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டுமனை அமைக்கும்போது ஊராட்சிக்கு சாலைகளை ஒப்படைக்கவில்லை. இருந்தாலும் மக்கள் நலன் கருதி ரூ.3 லட்சம் செலவில் தற்காலிகமாக கட்டிட கழிவுகள் கொட்டி பள்ளங்கள் சரி செய்யப்பட்டது. தரமான சாலை அமைக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் நிதி கோரி இருக்கிறோம்.
நிதி வந்தவுடன் தரமான சாலை அமைக்கப்படும். இந்த பகுதியில் வீட்டு மனை அமைப்பதில் கடந்த முறை இருந்த ஊராட்சி நிர்வாகம் குளறுபடி செய்ததால் மக்கள் அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT