

ஈரோடு: பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொள்ளவில்லை. பஸ் பயணம் தான் மேற்கொள்கிறார். இந்த பயணம் முடிந்த உடன் அவர் காணாமல் போய்விடுவார், என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோட்டில் நேற்று அவர் கூறியதாவது: நாடு முழுவதும் சுங்கச்சாவடியில் பணம் வசூலிப்பதில் பல லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. இறந்தவர்களின் பெயரைப் பயன்படுத்தி காப்பீடு பணம் எடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பிரதமர் மோடி மீது வழக்கு தொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நல்லாட்சி கொடுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் இடைஞ்சல் கொடுத்து வருகிறார். சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொள்ளவில்லை. பஸ் பயணம் தான் மேற்கொள்கிறார். இந்த பயணம் முடிந்த உடன் அவர் காணாமல் போய்விடுவார்.
ரஜினி கடவுள் நம்பிக்கை உடையவர். எனக்கு அவர்மீது மரியாதை உள்ளது. அவர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது வருத்தமாக இருக்கிறது. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழக்கை சந்தித்து நிரபராதி என நிரூபிப்பார்கள்.
அதிமுக மாநாடு புளியோதரை மாநாடு என்று சொல்லவேண்டும். 60 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாநாட்டை 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் உட்பட எந்த பதவிக்கும் இளைஞர்கள் வரவேண்டும் என நினைக்கிறேன், என்றார்.