Published : 29 Dec 2017 07:54 PM
Last Updated : 29 Dec 2017 07:54 PM

“ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி விஷம்” தேர்தல் பணியாற்ற தவறியவர்கள் மீது நடவடிக்கை: திமுக கூட்டத்தில் தீர்மானம்

ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு டெபாசிட் தொகையையும் இழந்தது. இது திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இடையே அதிர்ச்சையையும், விரக்தியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து தோல்வி நமக்கில்லை தோழா என்று கடிதம் எழுதினார்.

மறுநாள் தோல்வி குறித்து ஆராய மூன்று பேர் கொண்ட கமிட்டி போடப்பட்டது. அவர்கள் டிச.31 அறிக்கையை அளிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் கூடிய உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் ஆர்.கே.நகரில் தேர்தல் பணியாற்றாத திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

“திமுக எடுத்துக் கொண்ட உன்னதக் கொள்கை நிலைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கட்சித் தொண்டர்களும், கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும் பணியாற்றியதையும், தொடர்ந்து பெய்த பணமழைக்கு இடையிலும் கட்சிக்கு வாக்களித்தோரின் அன்பையும், இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு நன்றியுணர்வுடன் பதிவு செய்கிறது.

அதேநேரத்தில், “ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி விஷம்” என்பதைப் போல, கட்சியில் சிலர் அண்ணா, கருணாநிதி வகுத்துக் கொடுத்த அறவழியில் செயல்படவில்லை என்ற தகவல்கள் செயல் தலைவர் வந்திருப்பதால், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கட்சியினரின் செயல்பாடு குறித்து” ஆய்வு செய்ய, திமுக சட்டமன்ற கொறடா சக்ரபாணி உள்ளிட்ட மூன்று நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு தனது அறிக்கையை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், ஆய்வு செய்து, தேர்தல் பணியாற்றத் தவறிய கட்சியினர் எப்பொறுப்பு வகித்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு தெரிவித்துக் கொள்கிறது.”

இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x