

தமிழை ஒரு பாடமாகக் கொண்டு 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 42 மாணவ, மாணவிகளுக்கு ரூ.11 லட்சத்து 7 ஆயிரம் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுவதோடு, அவர்களது மேற்படிப்புக்கான செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது.
28 பேருக்கு ரூ.6.15 லட்சம்
2013-14ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 19 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயின்று மாநில அளவில் முதலிடம் பெற்ற 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் பார்வையற்றோர் பள்ளிகளில் பயின்று மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவன் மற்றும் செவித் திறன் குறைந்தோர் பள்ளியில் பயின்ற மாணவிக்கு தலா ரூ.25 ஆயிரம், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் அரசு சேவை இல்லங்களில் பயின்று மாநில அளவில் முதலிடம் பெற்ற 2 மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், வனத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயின்று மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவன், மாணவிக்கு தலா ரூ.25 ஆயிரம் என 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 28 பேருக்கு ரூ.6 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கப் பரிசை முதல்வர் வழங்கினார்.
14 பேருக்கு ரூ.4.92 லட்சம்
2013-14ம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் தமிழைப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ரூ.50 ஆயிரம், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத் தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயின்று மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவன், மாணவிக்கு தலா ரூ.50 ஆயிரம், ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 2 மாணவிகள், ஒரு மாணவனுக்கு தலா ரூ.10 ஆயிரம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் பார்வையற்றோருக்கான பள்ளியில் பயின்று மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி, செவித்திறன் குறைந்தோருக்கான பள்ளியில் பயின்று மாநில அளவில் முதலிடம் பெற்ற 2 மாணவிகள் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் அரசு சேவை இல்லங்களில் பயின்று மாநில அளவில் முதலிடம் பெற்ற 2 மாணவிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம், வனத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் பயின்று மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி மற்றும் 2 மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் 14 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 லட்சத்து 92 ஆயிரம் ரொக்கப் பரிசையும் முதல்வர் வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 42 மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.11 லட்சத்து 7 ஆயிரம் ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கி அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நலம்மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் பா.வளர்மதி, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி,வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பிற்படுத்தப் பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் த.சபிதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.