

மதுரை: இஸ்ரோ சார்பில், அனுப்பிய சந்திரயான் -3 என்ற விண்கலம் நிலவில் தரையிறங்கிய நிகழ்வை மதுரை மத்திய சிறை கைதிகள் கண்டுகளித்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூன் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து, விக்ரம் லேண்டர் மாலை 6:04 மணியளவில் நிலவில் தரை இறங்கியது. இச்சாதனை நிகழ்வை பல்வேறு தரப்பினரும் தொலைக்காட்சிகளிலும், செல்போன்களிலும் கண்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில், மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறைகளிலுள்ள கைதிகள் சந்திராயன் விண்கலம் ஏவும் நிகழ்வை தொலைக்காட்சியில் பார்க்க சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதன்மூலம் 1,911 ஆண் கைதிகளும், பெண்கள் தனிச்சிறையிலுள்ள 160 பேர் உட்பட 2000 க்கும் மேற்பட்ட சிறைவாசிகளும் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இது, போன்று பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் 1255 சிறைவாசிகள் இந்நிகழ்ச்சியை கண்டுகளித்துள்ளனர். சிறைத்துறை டிஐஜி பழனி, கண்காணிப்பாளர் பரசுராமன், தொழில்நுட்ப பிரிவு எஸ்ஐ திருமுருகன் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.