

கும்பகோணம்: சந்திரயான் –3, விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக இறங்குவதற்காக திங்களூர் கைலாசநாதர் கோயிலுள்ள சந்திர பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூன் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்–3 விண்கலத்தில் இருந்து பிரிந்து, விக்ரம் லேண்டர் மாலை 6: 02 மணியளவில் நிலவில் தரை இறங்கியது.
இந்நிலையில், சந்திரயான்–3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவதற்காக, திருவையாறு வட்டம், திங்களூர் கைலாசநாதர் கோயிலிலுள்ள, நவரக்கிரஹங்களில் ஒன்றான சந்திர பகவானுக்கு, மஞ்சள், சந்தனம், தயிர், பால், திரவியப்படி உள்ளிட்ட 21 மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட சந்திரனுக்கு மகா தீபாராதணை நடைபெற்றது. மேலும், சந்திரனால் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் சந்திரனுக்குரிய சிறப்பு மந்திரங்கள், பதிகங்கள் வாசிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை மேற்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் சார்பில் அறநிலையத்துறை ஒய்வு பெற்ற செயல் அலுவலர் டி.கோவிந்தராஜூ, வீ.கண்ணன், கணக்காளர் செல்வம் கவின்ராஜ், குருக்கள் சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர். இதே போல் தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள வராகி அம்மனுக்கு பாஜக சார்பில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் மாவட்டத் துணைத் தலைவர் ரஜினிகணேசன்,பொருளாளர் விநாயகம் மற்றும் பலர் பங்கேற்றனர்.