

சந்தைகளில் காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து தமிழக அரசின ்பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இக்கடைகளுக்கு காய்கறிகள் தாமதமாக வந்தாலும் பொதுமக்கள் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு ஜூன் 20-ம் தேதி, 30 இடங்களில் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் தொடங்கப்பட்டன. பொதுமக்களின் வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இந்த கடைகளின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த கடைகளுக்கு விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கறிகள் வாங்கப்படுகிறது. இதனால் இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதுடன் நுகர்வோருக்கும் மலிவான விலையில் காய்கறிகள் கிடைத்து வருகிறது.
இந்த பண்ணைப் பசுமைக் கடைகள் காலை 8 முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிலும் கடந்த சில நாட்களாக சந்தைகளில் காய்கறிகளின் விலை அதிகரித்து வருவதால் பண்ணைப் பசுமைக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த கடைகளுக்கு சனிக்கிழமையன்று காலை வழக்கம் போல 7 மணிக்கு காய்கறிகள் வரவில்லை. இதனால் பல கடைகளில் பொதுமக்கள் காத்திருந்தனர். திருவல்லிக்கேணி கடையில் காலை 11 மணிக்கே காய்கறிகளை வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்க வந்திருந்ததால் சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இது குறித்து காய்கறி வாங்க வந்த ஒருவர் கூறும்போது, “பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் வெளி மார்க்கெட்டை விட விலை குறைவாக உள்ளது. காய்கறிகள் பிரெஷ்ஷாகக் கிடைக்கிறது.அதனால் காய்கறிகள் வர கால தாமதம் ஏற்பட்டாலும் காத்திருந்து வாங்கிச் செல்கிறோம்” என்றார்.
சனிக்கிழமையன்று காய்கறிகள் வர தாமதம் ஏற்பட்டது குறித்து திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் (பொறுப்பு) வில்வசேகரன் கூறியதாவது:
காய்கறிகளை வெளியூரில் இருந்து கொண்டு வருகிறோம். வழக்கமாக காலை 6 மணிக்கெல்லாம் காய்கறி லாரிகள் வந்துவிடும். 7 மணிக்குள்ளாக அந்தந்த பண்ணைப் பசுமைக் கடைகளுக்கு அனுப்பப்படும். எப்போதாவது அந்த லாரிகள் நடுவழியில் நின்றால் மட்டுமே இதுபோன்ற தாமதங்கள் ஏற்படும். சனிக்கிழமையன்று இதுபோன்ற காரணத்தால் சற்று தாமதமாகிவிட்டது. இந்தக் கடைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 20 முதல் நடப்பாண்டு ஜூலை 17-ம் தேதி வரை 3839 டன் காய்கறிகள் ரூ.10.73 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.