Published : 23 Aug 2023 07:44 AM
Last Updated : 23 Aug 2023 07:44 AM
சென்னை: தமிழக உயர் கல்வித் துறையின் பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான பொது பாடத்திட்ட முறையை உயர்கல்வித் துறை நடப்பு கல்வியாண்டில் (2023-24) அமல்படுத்தியுள்ளது. ஆனால், இதற்கு தன்னாட்சி கல்லூரிகள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதையடுத்து தன்னாட்சி கல்லூரி பிரதிநிதிகளுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி சென்னையில் கடந்த 2-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் பெரும்பாலான தன்னாட்சி கல்லூரிகள் பொது பாடத்திட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள உயர்கல்வித் துறையிடம் வலியுறுத்தின.
இவற்றை பரிசீலித்த பின்பு, பொது பாடத்திட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் தன்னாட்சி கல்லூரிகள் சுயமாக முடிவு செய்து கொள்ளலாம் என்று உயர் கல்வித் துறை அறிவித்தது. இதற்கிடையே இந்த பொது பாடத்திட்ட குறைபாடுகள் தொடர்பாக பல்கலை.களின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவியிடம், சில தன்னாட்சி கல்லூரிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்திருந்தன.
இந்நிலையில், தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை என்று பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், தன்னாட்சி கல்லூரி நிர்வாக சங்கத்தின் தலைவருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பல்கலை. துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகள் உட்பட பல கல்வியாளர்கள், மாநில உயர்கல்வித் துறை பொது பாடத்திட்டத்தை ஏற்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருவது தொடர்பாக தங்களது கவலைகளை எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
குறிப்பாக தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் வடிவமைத்துள்ள பொது பாடத்திட்டம் கல்வி சுதந்திரத்தை பாதிக்கும். தற்போதுள்ள பாடத்திட்டத்தைவிட பின்னோக்கி இருக்கிறது. இதனால் உயர்கல்வியின் தரம் பாதிக்கப்படும். மேலும், என்ஐஆர்எஃப் தரவரிசை கட்டமைப்பில் இருந்து இந்த பொது பாடத்திட்டம் கல்வி நிறுவனங்களை வெளியேற்றிவிடும் என்றும் அதில் கவலை தெரிவித்திருந்தனர்.
நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பான பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) பாடத்திட்டம் தொடர்பாக ஒழுங்குமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வரையறை செய்துள்ளது. அந்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில்தான் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் பாடத்திட்டத்தை வடிவமைக்கின்றன.
எனவே. உங்கள் கல்விக் குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை நீங்கள் நடைமுறைப்படுத்தலாம். உயர்கல்விக்கான மாநில உயர்கல்வி மன்றம் வடிவமைத்த பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதம் விவகாரம் உயர்கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT