Published : 23 Aug 2023 06:09 AM
Last Updated : 23 Aug 2023 06:09 AM

நியோ- மேக்ஸ் முறைகேடு வழக்கில் 11 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மதுரை: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ-மேக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி,பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்து முறைகேடு செய்தது தொடர்பாக, மதுரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்த வழக்கில் பாலசுப்பிரமணியன், பழனிசாமி, அசோக் மேத்தா பஞ்சய், சார்லஸ், தியாகராஜன், கமலக்கண்ணன், பரசுராமன், நாராயணசாமி, செல்லம்மாள், பாஜகபிரமுகர் வீரசக்தி, செல்வகுமார்ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய் தனர். இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசுதரப்பில், நியோ-மேக்ஸ் மோசடி தொடர்பாக இதுவரை 126 பேர்புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரித்தால்தான் உண்மையில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எங்கு பதுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும். எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நிதி நிறுவனம் சார்பில் முதலீடு செய்த பணத்துக்கு பதிலாக, இடமாக வழங்குவதாக தெரிவிக்கின்றனர். அதை ஏற்க முடியாது. நில மதிப்பை காட்டிலும் அதிக பணம் முதலீடு செய்துள்ளதால், முதலீடு செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து நீதிபதி இளங்கோவன், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தர விட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x