Published : 22 Dec 2017 07:44 PM
Last Updated : 22 Dec 2017 07:44 PM

வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 1.87 கோடி: தமிழக அரசுக்கு ராமதாஸ் யோசனை

தமிழ்நாட்டில் வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 1.87 கோடியாக உள்ள நிலையில் புதிய வேலை வாய்ப்புக் கொள்கையை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும் என்று ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

2007-ம் ஆண்டில் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்திருந்தோரின் எண்ணிக்கை 49,64,285ஆகும். அதன்பின் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட 1.40 கோடி பேர் வேலை கேட்டு புதிதாக பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தோர் எண்ணிக்கையைக் கூட்டி, வேலை பெற்றோரின் எண்ணிக்கையை கழித்தால் வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை1.87 கோடியாகஇருந்திருக்க வேண்டும்.

ஆனால், வேலைவாய்ப்பக பதிவை காலாவதியாகாமல் வைத்திருப்போர் எண்ணிக்கை 79லட்சம் மட்டுமே என்று தமிழ்நாடு அரசு புள்ளிவிவரங்கள் கூறுவதால், மீதமுள்ள 1.08 கோடி பேர் தங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் வேலைவாய்ப்பக பதிவை புதுப்பிக்காமல் விட்டு விட்டனர் என்பது தான் உண்மை.

தமிழ்நாட்டில் வேலை கேட்டு ஒவ்வொரு ஆண்டும் 10லட்சம் முதல் 15லட்சம் பேர் வரை வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்யும் நிலையில், அதிகபட்சமாக 20,000 பேர் முதல் 30,000 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பகங்களின் மூலம் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.

2007-ஆண்டுக்குப் பிறகு கடந்த பத்தாண்டுகளில் 2.5லட்சம்பேருக்கு மட்டுமே அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானதல்ல. கடந்த 10 ஆண்டுகளில் 2.5லட்சம் பேருக்கு வேலை வழங்கிய தமிழக ஆட்சியாளர்கள், அதேகாலத்தில் 5.5லட்சம் அரசுத்துறை பணியிடங்களை நிரப்பாமல், படித்த இளைஞர்களுக்கு துரோகம் செய்தனர்.

அரசுத்துறையில் வேலை வழங்கும் லட்சணம் இப்படியென்றால் தனியார் துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது. கடந்த பத்தாண்டுகளில் வந்ததாகக் கூறப்படும் முதலீடுகள் உண்மை எனில் குறைந்தது 10லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு உருவாக்கப்படவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேருக்கும் அதிகமானவர்கள் படித்து விட்டு வேலையின்றி தவிக்கின்றனர்.

வேலைவாய்ப்புக் கிடைக்காததால் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தால் மட்டும் தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்திலுள்ள வளங்களை முறைப்படுத்தினால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் ஒருகோடி பேருக்கு வேலை வழங்க முடியும்.

எனவே, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக தனிக் கொள்கை வகுத்து படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5.5லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x