Published : 23 Dec 2017 10:07 PM
Last Updated : 23 Dec 2017 10:07 PM

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலேயே பாடச்சுமை; நீதிபதி கண்டிப்பு: மத்திய அரசுக்கு உத்தரவு

ஒன்றாம் வகுப்பிலேயே பாடச்சுமையை ஏற்றும்தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளை கண்டித்துள்ள நீதிபதி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி விதிகளின்படி ஒன்றாம் வகுப்பில் அவரவர் தாய்மொழியுடன், ஆங்கிலம், கணிதம் மட்டுமே போதிக்கப்படுகின்றது.

ஆனால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில், தாய்மொழியுடன், ஆங்கிலம், கணிதம், அறிவியல், கணினி அறிவியல், இந்தி, நன்னடத்தைப் பாடங்களையும் கூடுதலாக சேர்த்து ஒன்றாம் வகுப்பிலேயே பாடச்சுமை திணிக்கப்படுவதால் அதை தடுக்கக் கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சிபிஎஸ்இ வாரியம் வெறுமனே எச்சரிக்கை விடுப்பதோடு நின்று விடாமல், முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்கு குறித்து மத்திய அரசு, சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி, தமிழ்நாடு தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும், என்சிஇஆர்டி விதிகளை பின்பற்றாமல் மாணவர்களின் நலனுக்கு எதிரான சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அப்படிப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மழலைப் பருவத்தில் மாணவர்களுக்கு கல்வியும், பாடப் புத்தகமும் ஒரு சுமையாக இருக்கக்கூடாது என தெரிவித்ததுடன், முதலாம் வகுப்பு படிக்கும் குழந்தையின் மீது அதிக புத்தகச் சுமையை ஏற்றுவது அநியாயம் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x