Published : 23 Aug 2023 06:25 AM
Last Updated : 23 Aug 2023 06:25 AM
சென்னை: சென்னையில் செல்போன் கடையில் மத்திய உளவுத் துறை மற்றும் க்யூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்து திடீர் சோதனை நடத்தி ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்தியா முழுவதும் பயங்கரவாத செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்கவும் மத்திய உளவுப் பிரிவு (ஐபி) போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சந்தேகத்தின் பேரில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அந்த நபர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரது பின்னணி, அவர் யார் யாருடன் தொடர்பு கொண்டார் என்பது குறித்து விசாரித்தபோது வெளி மாநிலங்களைச் சேர்ந்த பலரது தொடர்பில் அவர் இருந்தது தெரியவந்தது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சிலருடன் தொலைபேசியில் அவர் பேசியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மத்திய உளவுப் பிரிவு போலீஸார், தமிழக க்யூ பிரிவு போலீஸாருடன் இணைந்து நேற்று அதிகாலை 5.10 மணியளவில் சென்னை பாரிமுனை 2-வது கடற்கரை சாலையில் ராயபுரத்தை சேர்ந்த மன்சூர் என்பவருக்குச் சொந்தமான செல்போன் கடையில் திடீர் சோதனை நடத்தினர். 7 மணிவரை சோதனை நீடித்தது. மன்சூரின் 2 சகோதரர்களிடமும் விசாரணை நடத்தினர்.
சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் பிடிபட்ட நபர் சட்ட விரோத அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் நிலையில் அவருக்கும் சென்னையைச் சேர்ந்த மன்சூருக்கும் என்ன தொடர்பு என உளவுப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT