Published : 23 Aug 2023 06:04 AM
Last Updated : 23 Aug 2023 06:04 AM
சென்னை: சென்னை தினத்தை முன்னிட்டு, ‘தி இந்து’ குழுமம் மற்றும் மாநகராட்சி சார்பில், இந்து ஆவண காப்பகத்தில் தேர்வு செய்யப்பட்ட சென்னையின் பரிணாமத்தை விளக்கும் அரிய புகைப்படங்களின் கண்காட்சியை ரிப்பன் மாளிகை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் தலைநகரான சென்னை கி.பி. 1639 ஆக.22- ம் தேதி தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இதை நினைவுகூர்ந்து சென்னை தினமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், 384-வது சென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில், சென்னை பள்ளி மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் அடங்கிய ‘அக்கம் பக்கம்’ என்ற புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ‘தி இந்து’குழுமம் சார்பில் இந்து ஆவணக் காப்பகத்தில் இருந்து, தேர்வு செய்யப்பட்ட சென்னை தொடர்பான அரிய புகைப்படங்களின் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்பட கண்காட்சிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். ‘அக்கம் பக்கம்’ புகைப்பட கண்காட்சியில், அப்படங்களை எடுத்த மாணவ, மாணவிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடி, அவர்களை பாராட்டினார்.
இதைத் தொடர்ந்து, ‘தி இந்து’ குழுமம் அமைத்துள்ள கண்காட்சியில் இருந்த 60-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டார்.
தொடர்ந்து, சென்னை தினத்தை முன்னிட்டு, ரிப்பன் மாளிகை வளாகத்தில் ‘தி இந்து’ குழுமம், சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.
‘தி இந்து’ குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘எபிக் சாகா ஆஃப் தி சோழாஸ்’, ‘தமிழ்நாடு இன் ஃபோக்கஸ்: கல்ச்சர் அண்டு சொசைட்டி; பாலிடிக்ஸ் அண்டு கவர்னன்ஸ்’ மற்றும் ‘பயனீர்ஸ் - ஸ்டார்ஸ் இன் தி மெட்ராஸ் கேலக்ஸி’ ஆகிய 3 புத்தகங்களையும் முதல்வர் வெளியிட, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் நிர்மலா லஷ்மண் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது: முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து, தமிழகம் சீரும் சிறப்புமாக உள்ளது. உங்களதுதிராவிட மாடல் ஆட்சி, இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது.குறிப்பாக பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தங்கள் நிர்வாகத்தில் தமிழகமும், சென்னை மாநகரமும் சிறப்பாக வளர்ந்துள்ளன.
மாநிலத்தின் செழுமையான பாரம்பரியம், வரலாற்றை தாங்கி நிற்கும் ரிப்பன் மாளிகையில், எங்களது ஆவண புகைப்பட கண்காட்சியை முதல்வர் திறந்து வைத்திருப்பது பெருமையாக உள்ளது. ‘தி இந்து’வின் ‘லென்ஸ்’ வழியாக மெட்ராஸ் முதல் சென்னை வரையிலான நமது நகரத்தின் பரிணாமத்தை விளக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு புகைப்படமும், ஒரு கதையை மக்களின் பார்வையில் வெளிப்படுத்தும். இந்த நகரம் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது.
சென்னையின் 384-வது பிறந்தநாளை நாம் கொண்டாடுவது என்பது, நகரத்தின் வயதை மட்டுமல்ல, சென்னை என்பது எவ்வாறு துடிப்புமிக்க பெருநகரமான சென்னையாக மாறியது என்பதை விளக்கும் பயணத்தையும் அடக்கியதாகும்.
‘தி இந்து’ என்பது பத்திரிகை மட்டுமல்ல; இந்த நகரத்தின் பயணத்தில் ஓர் அங்கமாகும். மை, தாள் ஆகியவற்றை தாண்டி எங்கள் அர்ப்பணிப்பு உள்ளது. இதழியலையும் தாண்டி, சமூகம் சார்ந்த முயற்சிகள், சிறப்பு புத்தக பதிப்புகள் மற்றும் கலை, கலாச்சாரம், வரலாறு சார்ந்தவற்றையும் வளர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவாக, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நன்றி கூறினார். துணை மேயர் மு.மகேஷ்குமார், இ.பரந்தாமன் எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், ‘தி இந்து’ குழும இயக்குனர்கள் என்.ராம், என்.முரளி, என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘தி இந்து’ குழும முயற்சிக்கு நன்றி: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை நாளில் ‘தி இந்து’ குழுமத்தின் 3 சிறப்பான நூல்களை வெளியிட்டதில் பெருமையடைகிறேன். ‘எபிக் சாகா ஆஃப் தி சோழாஸ்’ நூல் சோழப் பேரரசின் பிரம்மாண்டத்தையும், ‘தமிழ்நாடு இன் ஃபோக்கஸ்’ தொகுப்பானது தமிழகத்தின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த பல நூற்றாண்டு கால ஆர்வமூட்டும் பார்வையையும் வழங்குகிறது. ‘பயனீர்ஸ் - ஸ்டார்ஸ் இன் தி மெட்ராஸ் கேலக்ஸி’ நூல் நமது மண்ணைச் சேர்ந்த தளர்வுறாத சாதனையாளர்களைப் பெருமைப்படுத்துகிறது.
திராவிட மைய நிலத்தின் மரபையும், நாயகர்களையும் கொண்டாடும் இம்முயற்சிக்காக என்.ராம், என்.ரவி. என்.முரளி உள்ளிட்ட ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT