

சென்னை: அதிமுக மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்காத போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபியிடம், அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டிஜிபி சங்கர் ஜிவாலை நேற்று நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உயர் நீதிமன்றம் உத்தரவு: மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சில பிரச்சினைகளும் எழுந்தன. அந்த வகையில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த போலீஸார் தவறிவிட்டனர்.
நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை போலீஸார் நிறைவேற்றவில்லை. எனவே, இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி.யிடம் மனு கொடுத்துள்ளேன்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பாதுகாப்பு குழறுபடிகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளேன். இந்த விவகாரத்தில் டிஜிபி உரிய நடவடி க்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்.
உண்ணாவிரத நாடகம்: நாடாளுமன்ற தேர்தலுக்காக, நீட்டை எதிர்ப்பதுபோல திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி நாடகம் ஆடுகின்றனர். உதயநிதி ஸ்டாலின் பிரதமரை சந்தித்தபோது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தாரா? நீட்டை ரத்து செய்யும் சூட்சுமம் தெரியும் என்று கூறிவிட்டு மக்களை ஏமாற்றுகின்றனர்.
கச்சதீவு பிரச்சினை, காவிரி நதி நீர் பிரச்சினை என திமுகவால் விட்டு கொடுக்கப்பட்ட தமிழக உரிமைகளை அதிமுக மீட்டெடுக்கும் என்றார்.