

கும்மிடிப்பூண்டி: மாநெல்லூர் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அறிக்கை கள ஆய்வு செய்யாமல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட மாநெல்லூர்,சூரப்பூண்டி ஆகிய கிராமங்களுக்குட்பட்ட 692 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், ரூ. 353.28 கோடி மதிப்பில் மாநெல்லூர் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டம்நேற்று மாதர்பாக்கத்தில் நடைபெற்றது.
இந்த அறிக்கை தொடர்பாக பொது மக்கள் தெரிவித்ததாவது: கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள மற்ற சிப்காட் தொழில் பூங்காக்களில், உள்ளூர் மக்கள் பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் மாநெல்லூர் சிப்காட்டுக்காக விவசாய நிலங்களை இழக்கும் விவசாயிகள், தொழிலாளிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில், நீர் நிலைகள் மறைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், சுற்றியுள்ள கிராம பகுதிகள் என்ற பட்டியலில் பாதிரிவேடு, அல்லிப்பூக்குளம் கிராம விபரங்கள் இல்லை. நெசவு தொழிலாளர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்தஅறிக்கை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டு தலின்படி தயாரிக்கப்படவில்லை. களஆய்வு செய்யாமல்,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைதயாரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, முறையாக களஆய்வு செய்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரித்து மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். இவ் வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.