Published : 22 Dec 2017 09:31 AM
Last Updated : 22 Dec 2017 09:31 AM

தமிழ் இசை சங்கத்தின் 75-ம் ஆண்டு இசை விழா: டி.எம்.கிருஷ்ணா, சாமிநாத தேசிகருக்கு சிறப்பு பட்டம்

தமிழ் இசை சங்கத்தின் 75-வது ஆண்டு இசை விழா தொடக்க நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு ‘இந்து’ என்.ராம் தலைமை தாங்கினார். விழாவில், கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இசைப்பேரறிஞர் பட்டமும், பண்ணிசைக் கலைஞர் கரூர் கு.சாமிநாத தேசிகருக்கு பண்ணிசை பேரறிஞர் பட்டமும் வழங்கப்பட்டன. இந்த பட்டத்தை தமிழ் இசைச் சங்கத்தின் தலைவர் நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், கவுரவ செயலர் ஏ.சி.முத்தையா ஆகியோர் முன்னிலையில் என்.ராம் வழங்கினார். இப்பட்டம் பொற்கிழி, பாராட்டுச்சான்று, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

விழாவில் என்.ராம் பேசியதாவது: தமிழ் மொழியின் தொன்மையை அறிந்திருக்கும் நாம், அதன் பண்பாட்டுக் குறியீடுகளையும் அறிந்துகொள்ள வேண்டும். சங்ககாலம் முதல் தமிழ்மொழி இயல், இசை, நாடகம் என்ற 3 தளங்களில் இயங்கி வருகிறது. இன்றைய மேடைக் கச்சேரிகளுக்கு முற்பட்ட இசையும், நாடகமும் தமிழ் பகுதிகளில் இருந்ததற்கான பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. தமிழ்ப் பண்பாடுகளைப் பற்றி சங்க கால இலக்கியக் குறிப்புகள் உள்ளன.

தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் பகுதிகளில் இருந்த இசை வடிவங்களைப் பற்றியும், யாழ், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகளைப் பற்றிய குறிப்புகளும், தமிழின் முதல் காவியமான சிலப்பதிகாரத்தில் நாட்டிய வடிவங்களைப் பற்றியும், இசை வடிவங்கள் பற்றிய விரிவான பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. ஆரம்ப காலத் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் கவிதைகளாகவும், செய்யுள்களாகவும் இருப்பதே தமிழிசையின் தொன்மைக்கு மற்றொரு ஆதாரமாகும்.

கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி மூவரும் இசைக்கு ஒரு புதிய உந்துதலைத் தந்தனர். இதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழிசை மூவர் என்று அழைக்கப்படும் முத்துத்தாண்டவர், அருணாச்சல கவி, மாரிமுத்துப் பிள்ளை ஆகியோர் தமிழிசையின் அடிப்படையில் கர்நாடக இசைக்கு புதிய வடிவத்தை அளித்தனர்.

இவ்வாறு என்.ராம் பேசினார்.

விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணாவும், சாமிநாத தேசிகரும் ஏற்புரையாற்றினர். அவர்களை டாக்டர் வை.மைத்ரேயன் வாழ்த்திப் பேசினார். தொடக்க விழாவைத் தொடர்ந்து, டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x