Published : 15 Dec 2017 10:53 am

Updated : 15 Dec 2017 10:54 am

 

Published : 15 Dec 2017 10:53 AM
Last Updated : 15 Dec 2017 10:54 AM

திசை திரும்புகிறதா குமரி மீனவர்கள் போராட்டம்? - ஜன. 1 முதல் மீனவ கிராமங்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்: கத்தோலிக்க பாதிரியார்கள் அறிவிப்பு; போராட்டத்தின் உள்நோக்கம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

1

மீ

னவர்கள் உரிமைக்காக ஜனவரி 1-ம் தேதியில் இருந்து, தமிழக அளவில் மீனவ கிராமங்களில் தொடர் போராட்டம் தொடங்க உள்ளதாக, குமரி மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒக்கி புயலால் மாயமான மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த 1-ம் தேதியில் இருந்து தூத்தூர், சின்னத்துறை, நீரோடி, மார்த்தாண்டம்துறை போன்ற மீனவ கிராமங்களில் போராட்டங்கள் தொடங்கின. இது கடந்த 7-ம் தேதி ரயில் மறியல் போராட்டமாக வலுத்தது. இப்போராட்டங்களை கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் வழிநடத்தினர்.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 62 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரை பகுதி உள்ளது. இவற்றில் 44 மீனவ கிராமங்கள் உள்ளன. பங்கு தந்தை எனப்படும் 48 பாதிரியார்கள் தலைமையிலான பங்குப்பேரவைகள் இக்கிராமங்களில் உள்ளன. பங்கு தந்தையர்களே மீனவர்களை வழிநடத்தும் சக்தியாக உள்ளனர்.

கடந்த 7-ம் தேதி குழித்துறை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தவே இவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், மீனவர்கள் குழித்துறை வருவதற்கு ஏற்பாடு செய்திருந்த வாடகை வாகனங்கள் போலீஸார் தடை விதித்ததால் வர மறுத்தன. இதனால், 20 கிலோ மீட்டருக்கு மேல் நடந்தே வந்தனர். அதனால், போராட்டம் வலுத்தது. ரயில் மறியலாக மாறியது. இதைத் தொடர்ந்து 5 நாட்களாக சாலை மறியல் நடந்தது. இப்போராட்டங்களுக்கு சென்னை உட்பட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும், சினிமா பிரபலங்களும் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

இணைப்பு கோஷம்

இப்போராட்டக் களத்தில் மீனவ கிராமங்களை கேரளாவுடன் இணைக்க வேண்டும் என்ற கோஷமும் எழுந்தது. அதன் பின்னரே, போராட்டம் மாற்றுப் பாதையில் செல்வதை உளவுத்துறை கவனித்தது. மெரினா, நெடுவாசல் போராட்டங்கள் போன்று வலுவானால், அதன் பின்னர் அரசுக்கு பெரும் சவாலாகும் என்ற தகவல் சென்ற பின்னரே, முதல்வர் பழனிசாமி குமரி மாவட்டம் வந்தார். மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பகிரங்க குற்றச்சாட்டு

அதே நேரம், புயல் நிவாரண மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு எந்திரத்தை முடக்கவும், மீனவ சமுதாயத்துக்கு துரோகம் செய்யும் முயற்சியும் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு வலம் வந்தது.

சென்னையில் வசிக்கும் சமூகவியல் ஆராய்ச்சியாளரான, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகவுதமன், ‘குமரி மாவட்டத்தில் மீனவர்களை சுயமாக சிந்திக்க விடாமல், அனைத்து முடிவுகளையும் பாதிரியார்களே எடுக்கின்றனர்’ என பகிரங்கமாக குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: ஒக்கி புயல் பாதிப்பு நடவடிக்கை துரிதமாக நடந்து வந்தது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக வந்து, மீனவப் பிரதிநிதிகளை சந்தித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். கேரள கடல் பகுதியில் இருந்து இந்திய கடற்படையினர் மீனவர்களை வேகமாக மீட்கத் தொடங்கினர். ஆனால், 5 நாட்களுக்குப் பின்னர் மீனவர் பிரச்சினையை திசைதிருப்ப சூழ்ச்சி நடந்தது. இதில் சின்னத்துறை பாதிரியார் ஷபின், பூத்துறை பாதிரியார் ஆன்றோ ஜோரிஷ் ஆகியோர் தீவிரம் காட்டினர். பாதிரியார் ஷபின், பச்சை தமிழகம் அமைப்பின் தலைவர் சுப உதயகுமாரின் நண்பர். இவர்கள்தான், கூடங்குளம் அணு உலை போராட்டத்தையும் முன்னின்று நடத்தியவர்கள்.

ஆர்.கே.நகர் தேர்தல்

மெரினா, நெடுவாசல் போராட்டத்துக்குப் பின், தமிழகத்தில் வேறு பிரச்சினைகள் இல்லை. இந்நேரத்தில், மீனவர்கள் காணாமல்போன விஷயத்தை ஆயுதமாகப் பயன்படுத்தினர். மீனவர்களை மீட்க அரசு எதுவும் செய்யவில்லை என்ற கருத்தை திணித்து, அவர்களின் உணர்வுகளைத் தூண்டி, தீவிர போராட்டக் களமாக மாற்றினர். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து தேர்தல்களிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக மீனவ வாக்கு வங்கிகள் உள்ளன. ஆர்.கே.நகர் தொகுதியில் மீனவர் வாக்குகள் நிறைந்துள்ளன. இப்போராட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள மீனவ மக்களிடம் அரசுக்கு எதிரான கருத்தைக் கொண்டு போய் சேர்ப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மத்திய அரசின் நடவடிக்கையால் வெளிநாடுகளில் இருந்து கிறிஸ்தவ அமைப்புகளுக்கு வரும் நிதி ஆதாரங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதற்கான எதிர்ப்பையும் இப்போராட்டம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். மீனவர்கள் இயற்கை சீற்றத்தில் காணாமல் போவது என்பது எதிர்பாராதது. அதில் மீட்பு நடவடிக்கை சிறப்பாக உள்ளதா என்பதைத்தான் பார்க்கவேண்டும். அதை அரசியல் ஆக்கக்கூடாது. அனைத்து பகுதிகளைப் போலவும் விஏஓ, தாசில்தார் கட்டுப்பாட்டில் மீனவ கிராமங்களின் செயல்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் என்றார் பால கவுதமன்.

பாதிரியார் மறுப்பு

தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் பாதிரியார் சர்ச்சில் கூறியதாவது:

ரயில் மறியல் போராட்டத்தை நடத்திய 8 மீனவ கிராமங்களும், குமரி மாவட்டத்தில் இருந்தாலும், அவை திருவனந்தபுரம் கத்தோலிக்க மறைமாவட்டத்துக்கு உட்பட்டவை. இதனால், கேரளாவில் வழங்குவது போன்ற நிவாரணங்களை கொடுக்க வேண்டும் என கேட்டதில் தவறில்லை. மெரினா, நெடுவாசல் போராட்டம் போன்று, மீனவர் போராட்டத்தை மாற்ற முயற்சி செய்யவில்லை. இது, மீனவர்களின் வாழ்வுரிமை போராட்டம் மட்டும்தான்.

எவ்விதத்திலும் எங்கள் போராட்டம் திசைதிரும்ப நாங்கள் இடமளிக்கவில்லை. எங்களது உணர்வை மதிக்கும் வகையில், கோரிக்கைகளை முதல்வர் ஏற்றுக்கொண்டார். போராட்டத்தைக் கைவிட்டுள்ளோம். மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த மாத இறுதி வரை மீனவர்களின் மீட்பு நடவடிக்கை மட்டுமே எங்களது குறிக்கோள். அதன் பின்னர், எங்களது உரிமை போராட்டம் தொடரும் என்றார் சர்ச்சில்.

ஜனவரியில் மாநில போராட்டம்

பூத்துறை பங்குதந்தை பாதிரியார் ஆன்றோ ஜோரிஸ் கூறியதாவது: பூத்துறை கிராமத்தில் 52 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை. இதேபோன்ற ஒரு புயல் வந்தால் அரசு எங்களுக்கு என்ன பாதுகாப்பு வழங்கப் போகிறது? அதற்காகத்தான் எங்களின் இந்த வலுவான போராட்டம். மற்றபடி மாற்று சக்திகளை நாங்கள் ஊடுருவ அனுமதிக்கவில்லை. ஒரே தேசம், ஒற்றுமை என்பதில் பாதிரியார்கள் உறுதியாக உள்ளோம். அதே நேரம், ஜனவரி 1-ம் தேதியில் இருந்து மீனவர்கள் உரிமைக்காக, தமிழக கடற்கரை கிராமங்கள் முழுவதுமாக தொடர் போராட்டம் நடத்தப் போகிறோம். இதில் மாற்றமில்லை என்றார் அவர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x