

டிஎன்பிஎஸ்சி விவகாரம் - ஆளுநர் vs திமுக அரசு: டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் தெரிவு செய்யப்பட்டதில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றுள்ளதா என்பது உள்பட ஆளுநர் ரவி சில கேள்விகளை அரசுக்கு முன்வைத்து கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அரசு அனுப்பிய கோப்பில், முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மேலும் 7 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
இதனிடையே, டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபுவை நியமிக்க ஆளுநர் மறுப்பது ஏன் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். இது ஆளுநர் - திமுக அரசு இடையே புதிய மோதலைக் கிளப்பியுள்ளது.
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: எம்.பி, எம்எல்ஏக்களுக்கு அழைப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரும் 25-ம் தேதி விரிவுபடுத்தப்படவுள்ளது.
முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தக் காலை உணவுத் திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வருகிற 25-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கவிருக்கிறார். அன்றைய தினம் எம்பி, எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைத்திட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சசிகலா மனு மீது ஆக.30-ல் ஐகோர்ட் விசாரணை: அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வரும் 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
‘மகப்பேறு காலத்தில் கணவருக்கும் விடுமுறை’ - உயர் நீதிமன்றம்:மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க கணவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்தியாவில் மகப்பேறு காலத்தில் மனைவியுடன் கணவர் இருப்பதற்கு தனிச்சட்டம் நிறைவேற்ற அவசியம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி... என்எல்சிக்கு ஒரு நீதியா? - அன்புமணி: "ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, என்எல்சி சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க மறுப்பது ஏன்?" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளது: இஸ்ரோ: நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த அப்டேட்டை இஸ்ரோ அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 மிஷனின் இலக்காக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. இந்த நிகழ்வை மாலை 5.20 மணி முதல் நேரலையில் ஒளிபரப்புகிறது இஸ்ரோ. சமூக வலைதளம், இஸ்ரோ வலைதளம் மற்றும் தொலைக்காட்சியில் இது லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
பிரகாஷ் ராஜ் மீது புகார் பதிவு: சந்திரயான்-3 மிஷனை கிண்டல் செய்யும் தொனியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு சர்ச்சையான நிலையில், பிரகாஷ் ராஜ் மீது கர்நாடகாவில் பாகல்கோட் மாவட்டப் போலீஸார் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகாரை, இந்து அமைப்பினர் அளித்துள்ளனர்.
தொடரும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை: தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று, 15 வயது சிறுமியை கத்திமுனையில் அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
முன்னதாக, டெல்லியின் தனது நண்பரின் 16 வயது மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த அரசு அதிகாரி பிரேமோதய் ஹாக்கா, சிறுமிக்கு கருகலைப்பு மாத்திரை வழங்கிய குற்றச்சாட்டில் அவரது மனைவி சீமா ராணியையும் டெல்லி போலீசார் திங்கள்கிழமை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். தனது பயணம் தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ள பிரதமர், "24-ம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொள்கிறேன். தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா அழைப்பை ஏற்று அங்கு நடைபெறவுள்ள 15-வது பிரிக்ஸ் மாநாட்டுக்காகச் செல்கிறேன்.
'பிரிக்ஸ்' ஒட்டுமொத்த தென் பிராந்தியத்தின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு களமாக உருவாகியுள்ளது. இந்த மாநாடு பிரிக்ஸ் நாடுகள் வருங்காலத்தில் எந்தெந்த துறைகளில் கூட்டுறவை மேம்படுத்த வேண்டும் என்பதற்கு பயனுள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். தென் ஆப்பிரிக்கா பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக நான் சில உலகத் தலைவர்களுடன் இருநாட்டு நல்லுறவு குறித்து பேசவுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
'தாயின் துணை தனிச்சிறப்பானது' - கேரி காஸ்பரோவ்:நடப்பு உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவுக்கும் அவரது தாயாருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பிரக்ஞானந்தாவுக்கும் அவரது தாயாருக்கும் வாழ்த்துகள். என் அம்மா எனது அத்தனை போட்டிகளிலும் என்னுடன் வந்திருக்கிறார் என்ற முறையில் சொல்கிறேன். தாயின் துணை மிகச் சிறப்பானது. சென்னையைச் சேர்ந்த இந்த இளைஞர் நியூயார்க் கவ்பாய்ஸ் இருவரை வீழ்த்தியுள்ளார். மிகச் சிக்கலான தருணங்களிலும் கூட பிரக்ஞானந்தா திடமாக இருந்துள்ளார்" என்று நெகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.